பாலியல் வழக்கு: என்ன சொல்கிறார் நிவின் பாலி?

"நான் ஓடி ஒளியவில்லை. இங்கு தான் இருக்கிறேன், இங்குதான் இருப்பேன்."
படம்: https://x.com/NivinOfficial
படம்: https://x.com/NivinOfficial
2 min read

பாலியல் குற்றச்சாட்டில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

மலையாள திரைத் துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஹேமா குழு தயாரித்த அறிக்கை கடந்த 19 அன்று வெளியானது. இந்த அறிக்கையில், மலையாள திரைத் துறையில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.

இதன் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். நடிகர் சங்கத்தின் நிர்வாகக் குழு முழுவதுமாகக் கலைக்கப்பட்டது.

ஹேமா குழு அறிக்கை வெளியான பிறகு, கேரள அரசு 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் எழ, வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டன. சித்திக், முகேஷ், ஜெயசூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

இதன்தொடர்ச்சியாக, பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் முன்னணி நடிகர் நிவின் பாலி மீது எர்ணாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவியதையடுத்து, சமூக ஊடகப் பக்கங்களில் இதற்கு மறுப்பு தெரிவித்தார் நிவின் பாலி. தொடர்ந்து செய்தியாளர்களையும் அழைத்து விளக்கம் கொடுத்தார்.

"இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை நான் எதிர்கொள்வது இதுவே முதன்முறை. ஊடகங்கள் முழுக்க என் பெயர் அடிபடுவதைப் பார்க்க நன்றாக இல்லை. என்னையும் என் குடும்பத்தையும் இது பாதித்துள்ளது. நீதி என் பக்கம் உள்ளது என்பதை நான் அறிவேன். நான் எதுவுமே செய்யவில்லை. அதனால்தான் இந்தச் செய்தியாளர் சந்திப்பையே நடத்துகிறேன். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். இதை நான் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன்.

பாதிக்கப்பட்டவர் புகாரளித்திருப்பதாகக் காவல் நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. சம்பந்தப்பட்ட நபர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று ஆய்வாளரிடம் கூறினேன். இந்த வழக்கு போலியானது என்று கூறி முடிக்கப்படும் என்றார்கள். அவர்களிடத்தில், என்னால் பதில் புகார் அளிக்க முடியுமா என்று கேட்டேன். அவர்களுக்குத் தேவையற்ற வெளிச்சத்தைக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி புகார் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். என் தரப்பு சட்டக்குழுவினரும் இதையேதான் கூறினார்கள்.

போலி குற்றச்சாட்டுகள் வழக்கமாகிவிட்டால், அது சரியாக இருக்காது. போலி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அனைவருக்காகவும்தான் நான் போராடுகிறேன். நடைமுறை முழுமையாக நிறைவடைய காலம் எடுக்கும். திரைத் துறையிலிருந்து நண்பர்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். எனினும், நான் தனியாகப் போராட வேண்டும் என்றாலும் அதை நான் செய்வேன். அதேசமயம், நான் ஓடி ஒளியவில்லை. இங்கு தான் உள்ளேன், இங்குதான் இருப்பேன்" என்றார் நிவின் பாலி.

புகாரளித்தவரின் நோக்கம் குறித்த கேள்வியைத் தொடர்ந்து பதிலளித்த நிவின் பாலி, "சில பேருடைய சதித் திட்டமாக இருக்கலாம். எனக்குச் சரியாக தெரியவில்லை. சொல்லப்போனால், காவல் துறையினர் என்னை அணுகி, எனக்கு எதிரான புகார் மனுவை வாசித்துக் காட்டினார்கள். நான் என் தரப்பு நியாயத்தை விளக்கினேன். அவர்கள் என்னைச் சமாதானப்படுத்தினார்கள். இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருப்பதால், நான் என்ன பேசி வருகிறேன் என்பதிலும் கவனமாக உள்ளேன். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரைத் தவிர்த்து யாரையுமே தெரியாது. நிறைய மலையாளத் திரைப்படங்களுக்கு நிதி கொடுத்துள்ளார். என்னுடையப் படங்களுக்கும் அவர் நிதி கொடுத்துள்ளார். மற்றபடி அவருக்கும் எனக்கும் வேறு எந்தத் தொடர்பும் கிடையாது.

போலி குற்றச்சாட்டை யார் மீது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதை நிறுத்த வேண்டும்.

இந்தச் செய்தி வந்தவுடன் நான் முதலில் என் அம்மாவைதான் அழைத்தேன். அவரிடம் இதுமாதிரி செய்திகள் வலம் வருவதாகக் கூறினேன். இதை எதிர்கொள்வதற்கான தைரியத்தை அவர் எனக்கு அளித்தார். பதற்றமடைய வேண்டாம் என்று அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்" என்றார் நிவின் பாலி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in