மெல்போர்ன் பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சாமினாதன் வென்றுள்ளார்.
2017-ல் வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், பாரதிராஜா, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம்புலி உட்பட பலரும் நடித்த படம் ‘மகாராஜா’.
இப்படம் கடந்த ஜூன் 14 அன்று வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
மேலும், ஓடிடி தளத்திலும் அதிக பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற இந்தியப் பட விழாவில் (Indian Film Festival of Melbourne) திரையிடப்பட்ட மகாராஜா படம், சிறந்த இயக்குநருக்கான விருதை வென்று அசத்தியுள்ளது.
சிறந்த இயக்குநருக்கான விருதுப்பட்டியலில் அதிகப்படியான விருப்பத்தேர்வாக மகாராஜா இருந்தநிலையில் நித்திலன் சாமினாதனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. மேலும், இயக்குநர் கபீர் கானும் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இப்பிரிவில் இம்தியாஸ் அலி, கரண் ஜோஹர், ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா, ராகுல் சதாசிவன் போன்ற சிறந்த இயக்குநர்களும் இடம்பெற்றிருந்தனர்.