பாடகி எஸ். ஜானகியின் 86-வது பிறந்தநாள்: கொஞ்சும் குரல்
@SIIMA

பாடகி எஸ். ஜானகியின் 86-வது பிறந்தநாள்: கொஞ்சும் குரல்

இளையராஜா - எஸ்.பி.பி. - ஜானகி கூட்டணி 80களில் மகத்தான பாடல்களை அளித்தது...

எஸ். ஜானகியையும் தமிழ்த் திரையிசையையும் பிரித்துப் பார்க்க முடியுமா? எத்தனை எத்தனை மகத்தான பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் நிறைந்துள்ளார். இன்று ஜானகியின் 86-வது பிறந்தநாள்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938 ஏப்ரல் 23 அன்று பிறந்தவர் எஸ். ஜானகி.

மூன்று வயது முதல் பாடல்களைப் பாடி அனைவரையும் கவர ஆரம்பித்தார். படிப்பில் சுமாராக இருந்ததால் எட்டு வயதில் முறையாக பைடிசாமி என்கிற நாதஸ்வர வித்துவானிடம் இசையைக் கற்க அனுப்பினார் தந்தை. தாய்மாமன் அறிவுரையின்படி சென்னைக்கு வந்த ஜானகி, அவருடைய பரிந்துரையால் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் கோரஸ் பாடகியாகத் தன் இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.

1956-ல் அகில இந்திய வானொலி இசைப் போட்டியில் குடியரசுத் தலைவரிடமிருந்து பரிசு பெற்றார். 1959-ல் ராம்பிரசாத்தைத் திருமணம் செய்துகொண்டார்.

1957-ல் விதியின் விளையாட்டு படத்தில் முதல்முதலாகப் பாடினார். இசை - சலபதி ராவ். பாட வந்த முதல் ஆண்டிலேயே ஆறு மொழிகளில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஜானகியை அனைவருக்கும் கொண்டு சேர்த்த பாடல் - சிங்கார வேலனே தேவா (கொஞ்சும் சலங்கை). இசை - எம்.எஸ். சுப்பையா நாயுடு. காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்துடன் இணைந்து ஜானகி பாடிய பாடல் இசை விமரிசகர்களின் பாராட்டைப் பெற்றது. எனினும் ஜானகியால் தமிழ்த் திரையுலகில் உடனடியாக நெ.1 பாடகியாக முன்னேற முடியாமல் போனது. இதர மொழிகளில் சட்டென்று உயரத்துக்குச் சென்ற ஜானகி, தமிழில் இளையராஜாவின் காலம் தொடங்கும்வரை காத்திருக்க வேண்டியதாக இருந்தது.

இளையராஜாவின் பொற்காலம் தமிழ்த் திரையுலகில் ஆரம்பமாகும் முன்பும் சிறப்பான பாடல்கள் பலவற்றை தமிழில் பாடியுள்ளார் ஜானகி. தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே (ஆலயமணி), ராதைக்கேற்ற கண்ணனோ (சுமைதாங்கி), உலகம் உலகம் (உலகம் சுற்றும் வாலிபன்), மலரே குறிஞ்சி மலரே (டாக்டர் சிவா), ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கையொலி (பாசம்) எனப் பல பாடல்களைக் கூற முடியும்.

ஜானகியின் திறமையை முழுவீச்சில் பயன்படுத்திக் கொண்டவர் இளையராஜா. முக்கியமாகக் கிராமத்துப் பாடல்களுக்குச் சரியாக உச்சரிப்புடன் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் ஜானகி. இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியிலேயே அவர் 3 பாடல்களைப் பாடினார். ஜானகி பாடிய அன்னக்கிளியே உன்னைத் தேடுதே, மச்சானைப் பார்த்தீங்களா பாடல்கள் இளையராஜாவின் ஆரம்பக் கால வளர்ச்சிக்கும் பெரிதும் உதவின.

இளையராஜா - எஸ்.பி.பி. - ஜானகி கூட்டணி 80களில் மகத்தான பாடல்களை அளித்தது. ஜானகிக்கு இனிமையான குரல் என்கிற பாராட்டை விடவும் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளுக்கேற்ப சிறப்பாகப் பாடுபவர் என்கிற பெயர் உண்டு. அவர் பாடிய பாடல்களை எண்ணிப் பாருங்கள். அதில் ஜானகி பாடினார் என்கிற உணர்வை விடவும் கதாபாத்திரமே தகுந்த உணர்ச்சிகளுடன் பாடுபவது போன்றுதான் நமக்குத் தோன்றும். பாடகியாக ஜானகி பல வருடங்கள் நிலைத்ததற்கு இதுவே முக்கியக் காரணம்.

அன்னக்கிளியில் ஆரம்பித்து அடுத்த இருபது வருடங்களுக்கு ஜானகியே தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடகியாக இருந்தார். இக்காலக்கட்டத்தில் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடும் வாய்ப்பு ஜானகிக்குக் கிடைத்தது.

'கண்மணியே காதல் என்பது' (ஆறிலிருந்து அறுபதுவரை)

'காற்றில் எந்தன் கீதம்' (ஜானி)

'அழகிய கண்ணே' (உதிரிப்பூக்கள்)

'பாடும் நிலாவே'

'தேனே தென்பாண்டி மீனே' (உதயகீதம்)

கண்ணன் வந்து பாடுகிறான்' (ரெட்டைவால் குருவி)

'செந்தூரப்பூவே' (16 வயதினிலே)

''மௌனமான நேரம்' (சலங்கை ஒலி)

'கண்மணி அன்போடு' (குணா)

'புத்தம் புது காலை' (அலைகள் ஓய்வதில்லை)

'நாதம் என் ஜீவனே' (காதல் ஓவியம்)

'ஓகோ மேகம் வந்ததோ' (மௌனராகம்)

'பருவமே புதிய பாடல் பாடு' (நெஞ்சத்தைக் கிள்ளாதே)

'சங்கத்தில் பாடாத கவிதை' (ஆட்டோராஜா)

'பாடவா உன் பாடலை' (நான் பாடும் பாடல்)

'ஒரு பூங்காவனம்' (அக்னி நட்சத்திரம்)

'இது ஒரு நிலாக்காலம்' (டிக் டிக் டிக்)

எந்தப் பாடகரிடம் இல்லாத ஒரு சிறப்பம்சம் ஜானகியிடம் உண்டு. அவர் பாடும்போது உடலில் பெரிதாக அசைவே இருக்காது. எந்த உணர்வில் பாடுகிறார் என்பதை அவருடைய முகத்திலோ உடல் அசைவுகளிலோ காண முடியாது. பாடலுக்குத் தேவையான உணர்வுகளைக் குரலில் மட்டுமே வெளிப்படுத்துவார்.

17 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்களம், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கொங்கணி, துளு எனப் பல மொழிகளில் பாடியுள்ளார். ஐந்து தலைமுறைக் கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார். நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் ஐந்து மொழிகளில் பின்னணி பாடியுள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பாடகியாக இருந்தவர் ஜானகி. 1958-ல் மின்னுந்நதெல்லாம் பொன்னல்ல என்கிற படத்தில் இடம்பெற்ற இருள் மூடுகயோ வானில் என்கிற பாடலின் மூலம் அறிமுகமானார். எம்.பி. ஸ்ரீனிவாசன், தட்சிணாமூர்த்தி, சலில் செளத்ரி எனப் பலரின் இசையில் ஏராளமான பாடல்களைப் பாடினார்.

ஹிந்தியில் அதிகப் பாடல்களைப் பாடிய தென்னிந்தியப் பாடகி, ஜானகி தான். அதற்கு இரு காரணங்கள். ஹிந்திக்குச் செல்லும் தென்னிந்திய இசையமைப்பாளர்கள், தவறாமல் ஜானகிக்கும் ஹிந்திப் பாடல்களைப் பாட வாய்ப்பளிப்பார்கள். அடுத்தது தென்னிந்திய மொழிகளைப் போல ஹிந்தியிலும் சரியான உச்சரிப்புடன் பாடும் திறமையைப் பெற்றிருந்தார் ஜானகி. இதனால் லட்சுமிகாந்த் பியாரிலால், சலில் செளத்ரி, பப்பி லஹரி, ஆனந்த் மிலிந்த் போன்றோரின் இசையமைப்பிலும் ஹிந்திப் பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.

ஏ.ஆர். ரஹ்மானின் ஆரம்பக் காலகட்டத்திலும் ஜானகி பல பாடல்களைப் பாடியுள்ளார். ஒட்டகத்தைக் கட்டிக்கோ (ஜெண்டில்மேன்), கத்தாழ காட்டு வழி (கிழக்கு சீமையிலே), காதல் கடிதம் கேட்டதும் (ஜோடி), மார்கழித் திங்கள் அல்லவா (சங்கமம்), முதல்வனே (முதல்வன்), நெஞ்சினிலே (உயிரே) போன்ற பாடல்களின் மூலம் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் தன்னுடைய பங்களிப்பை அளித்தார்.

நான்கு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் ஜானகி. 1977-ல் செந்தூரப்பூவே செந்தூரப்பூவே (16 வயதினிலே) 1981-ல் மலையாளப் பாடலான ஏற்றுமானூர் அம்பலத்தில் (ஓப்போள்), 1984-ல் தெலுங்குப் பாடலான வெண்ணல்லோ கோதாரி (சிதாரா), 1992-ல் இஞ்சி இடுப்பழகா (தேவர் மகன்). தமிழக அரசு விருதை ஆறு முறையும் ஆந்திர அரசு விருதைப் பத்து முறையும் கேரள அரசு விருதைப் பதினோரு முறையும் பெற்றுள்ளார். மாநில அரசு விருதை 41 முறை பெற்றுள்ளார். கன்னடத்தில் மட்டும் 35 வருடங்களுக்கு மேலாகப் பாடியும் அவருக்கு எந்தவித மாநில அரசு விருதும் கிடைக்கவில்லை. எனினும் மைசூர் பல்கலைக்கழகம் ஜானகிக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

மலையாளப் பாடகிகளில் அதிகமுறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றவர் ஜானகி தான். ஆரம்பம் முதல் மலையாளப் படங்களில் பாட ஆரம்பித்த ஜானகி, மலையாளப் பாடலுடனே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். மலையாளத் திரையுலகுக்குச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை முதலில் பெற்றுத் தந்தவர், ஜானகி. அவருடைய வாழ்க்கை வரலாறு (Aalapanathile Thenum Vayambum - Abhilash Puthukad) மலையாளத்தில் வெளிவந்துள்ளது.

எஸ்.பி.பியின் திறமையை அவர் திரையுலகுக்கு வரும் முன்பே அறிந்துகொண்டவர் ஜானகி. தெலுங்குச் சங்கம் ஒன்று நடத்திய பாடல் போட்டியில் தொடர்ந்து இரு வருடங்கள் முதலிடம் வந்தார் அப்போது இளைஞராக இருந்த எஸ்.பி.பி. அப்போது அவர் திரைத்துறைக்கு அறிமுகமாகவில்லை. மூன்றாவது ஆண்டுக்கான போட்டியில் எஸ்.பி.பி. பரிசு வென்றால் ஒரு பெரிய வெள்ளிக்கோப்பை பரிசாகக் கிடைக்கும். ஆனால் அந்த ஆண்டுப் போட்டியில் எஸ்.பி.பி.யால் 2-வது பரிசையே வெல்ல முடிந்தது. இந்தப் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கியவர் எஸ். ஜானகி. இவரால் போட்டி முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2-வது பரிசை வாங்கியுள்ள இளைஞர், முதல் பரிசு வென்றவரை விடவும் நன்றாகப் பாடினார். ஆகவே போட்டியின் முடிவுகளை ஏற்க முடியவில்லை என்று வெளிப்படையாகப் பேசினார். இதையடுத்து எஸ்.பி.பி.க்கு முதல் பரிசும் வெள்ளிக்கோப்பையும் கிடைத்தன.

* 2013-ம் ஆண்டு ஜானகிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் தாமதமாக இந்த விருதை வழங்குவதால் விருதை ஏற்கமாட்டேன் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜானகி. லதா மங்கேஷ்கருக்கு 1969-ல், முதல் பத்ம விருது வழங்கப்பட்டது. பத்மஸ்ரீகூட இல்லை, நேராக பத்ம பூஷன். ஆஷா போஷ்லேவுக்கு மிகத் தாமதமாக (2008) கொடுக்கப்பட்டாலும், பத்ம விருதுகளிலேயே மிகவும் உயரியதான பத்ம விபூஷன் கிடைத்தது. ஜானகி 1957-லிருந்து சினிமாவில் பாடுகிறார். 55 வருடங்களுக்குப் பிறகுதான் முதல் பத்ம (பூஷன்) விருது அறிவிக்கப்பட்டது. வட இந்தியர்களுக்குத்தான் இந்த விருதுகள் அதிகமாக வழங்கப்படுகின்றன. தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார் ஜானகி.

2018-ல் இனிமேல் பாடப்போவதில்லை என அறிவித்தார் ஜானகி. 2016-ல் மலையாளப் படத்துக்காக தாலாட்டு பாடல் ஒன்றைக் கடைசியாகப் பாடினார். எனினும் பண்ணாடி என்கிற படத்துக்காக இரு பாடல்களைப் பாடியதாகத் தகவல் வெளியானது. அப்பாடல்களுக்கு இசையமைத்த ராஜேஷ் ராமலிங்கம், 2012-ல் ஒரு பாடலுக்காக ஜானகியை அணுகியுள்ளார். ஆனால் அப்போது தொண்டையில் கிருமித் தொற்று ஏற்பட்டதால் பாட முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் பாடித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் ஜானகி. அதைக் காப்பாற்றுவதற்காக ராஜேஷ் ராமலிங்கம் மீண்டும் அணுகியபோது மறுப்பு சொல்லாமல் பாடிக்கொடுத்துள்ளார்.

2018-ல் வெளியான விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தில் நடித்திருந்தார் ஜானகி. ஆனால் நீளம் கருதி ஜானகி நடித்த காட்சிகள் வெட்டப்பட்டன. இரவு வேளையில் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் பாடகி ஜானகியை அவருடைய வீட்டில் சந்திப்பது போல அக்காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. படம் வெளியான பிறகு நீக்கப்பட்ட காட்சி யூடியூப் தளத்தில் வெளியானது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in