தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் வரும் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறினார்.
"சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளோம். இதைத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பகிர்ந்துகொள்வோம்.
ஆகஸ்ட் 16-க்குப் பிறகு எந்தவொரு புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கக் கூடாது என்கிற முடிவை எடுத்தது தயாரிப்பாளர்கள் சங்கம். இதுதொடர்பாக, அவர்களிடத்தில்தான் கேட்க வேண்டும்.
படப்பிடிப்பு நிறுத்தம் வரக் கூடாது என்பதுதான் எங்களுடைய விருப்பம். இதுதொடர்பாக, அவர்களிடத்தில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். நடிகர்களின் சம்பளக் குறைப்பு குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பேசவுள்ளோம்" என்றார் நாசர்.
நடிகர் சங்கம் துணைத் தலைவர் பூச்சி முருகன் கூறியதாவது:
"தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கு இரு கோரிக்கைகள் உள்ளன. பேச்சுவார்த்தை மூலம் பேசிக்கொள்ளலாம் என்று நாங்கள் கூறியிருந்தோம். பேச்சுவார்த்தை மூலம் பேசி, தீர்வு காணலாம் எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி நேற்று எங்களுக்குக் கடிதம் அனுப்பிவிட்டார். நாங்கள் நட்புணர்வுடன் இருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை.
சில நடிகர்கள் மீது புகாரளிப்பதும், புகார் தொடர்பாக நாங்கள் பதிலளிப்பது வழக்கமானதுதான்.
பேச்சுவார்த்தை வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம். இதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். பேச்சுவார்த்தை ஏதேனும் ஒரு தேதியைக் கூறுங்கள் என்று முரளி எங்களுக்குக் கடிதம் அனுப்பிவிட்டார். இந்த வாரத்தில் ஒரு தேதியைக் கூறவிருக்கிறோம். பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைத்தும் சுமுகமாக முடிந்துவிடும்" என்றார் துணைத் தலைவர் பூச்சி முருகன்.