
இயக்குநர் மிஷ்கின் ஒரு போலி அறிவாளி என நடிகர் அருள்தாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ், மிஷ்கினை விமர்சித்து பேசியது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.
"சமீபத்தில் பாட்டல் ராதா பட மேடையில் மிஷ்கின் பேசியது மிகவும் அநியாயமாக அக்கிரமமாக இருந்தது. அந்தளவுக்குக் கொச்சையாகப் பேச வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. இயக்குநர் என்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது கிடையாது.
மிஷ்கின் பேசிய காணொளியைப் பார்த்தேன். ரொம்ப தலைகுனிவாக இருந்தது. இந்திய சினிமாவில் மிகவும் மதிக்கக்கூடிய இடத்தில் தமிழ் சினிமா உள்ளது.
தமிழ் சினிமா இயக்குநர்கள் மட்டுமல்ல, தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்திய சினிமா அளவில் மதிக்கக்கூடிய இடத்தில் உள்ளார்கள்.
அதேபோல, இந்த பிரசாத் லேப் திரையரங்க மேடை என்பது பல ஜாம்பவான்களைப் பார்த்த மேடை. தென்னிந்தியாவிலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமிருந்து வந்து இந்த மேடையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இந்த மேடையில் அமர்ந்து பேசிச் சென்றுள்ளார்கள்.
அந்த மாதிரியான மேடையில் இவ்வளவு பத்திரிகையாளர்கள் நண்பர்கள், பெண் பத்திரிகையாளர்கள் இருக்குமிடத்தில் கொச்சையாகப் பேசுவது... வெளியில் பேசிக்கொள்ளுங்கள், ஒரு மேடை நாகரிகம்னு ஒன்று கிடையாதா? என்ன வேண்டுமானாலும் பேசுவதா? அவ்வளவு புத்தகம் படித்துள்ளேன் என்கிறீர்கள், அவ்வளவு படங்களைப் பார்த்துள்ளேன், உலக படங்களைப் பார்த்துள்ளேன் என்று சொல்கிறீர்கள். உலகம் முழுக்க உள்ள புத்தகங்களைப் படித்துள்ளீர்கள் என்கிறீர்கள். பிறகு, என்ன அறிவு இருக்கு உங்களுக்கு? குறைந்தபட்சம் ஒரு நாகரிகம் வேண்டாமா? மேடையில் பேசக்கூடிய பேச்சா இது?
உங்களுக்குப் பெண் குழந்தை உள்ளது. எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எல்லோருக்கும் பெண் குழந்தைகள் உள்ளார்கள். எனவே, மேடை நாகரிகம் என்பது முக்கியம். இந்த மேடை எவ்வளவு நாகரிகமாக இருந்தது என்று பார்த்தீர்களா? யாராவது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்களா? அதெல்லாம் கிடையாது.
தம்பி என்று எல்லோரையும் அழைக்கலாம். ஆனால், அவன் நம்மை அண்ணனாக நினைக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். அப்படி உங்களை யார் அண்ணனாக நினைத்தார்கள் எனத் தெரியவில்லை. எல்லோரையும் வாடா, போடா என்கிறார். நான் இன்று பேச வேண்டும் என நினைக்கவில்லை. தொடர்ந்து, பல மேடைகளில் மிஷ்கின் பேசுவதைப் பார்த்து வருகிறேன்.
சமீபத்தில், பாலாவின் 25-வது ஆண்டு கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அங்கே, அவர் ஏதோ பெரிய குடிகாரனைப்போல, படுத்துக்கிடந்தான் பாலா, அவன் தான் பாலா என்று பேசுவது... இங்கு வந்து அவன்தான் இளையராஜா என்று சொல்வது.
யார் நீ? தமிழ் சினிமாவில் நீ அவ்வளவு பெரிய ஆளா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு போலி அறிவாளி. அப்படித்தான் சொல்ல வேண்டும். உலக சினிமாவிலிருந்து நகலெடுத்து படம் செய்து வெற்றி பெற்ற ஒரு போலி அறிவாளி மிஷ்கின்" என்றார் அருள்தாஸ்.
முன்னதாக, பாட்டல் ராதா பட விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். தனது உரையில் கொச்சையான சொற்களைப் பயன்படுத்தி மிஷ்கின் பேசியது பேசுபொருளானது.