பாட்டல் ராதா விழாவில் பேசியதற்கு மன்னிப்பு: இயக்குநர் மிஷ்கின்

"நான் உங்கள் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு, உங்களையெல்லாம் கடவுளாக்குகிறேன்."
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

மனதில் இருந்து பேசும்போது அப்படி ஆகிவிட்டது, அதற்காக தான் மன்னிப்புக் கேட்பதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

பேட் கேர்ல் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் மிஷ்கின் பேசினார். பாட்டல் ராதா பட விழாவில் கொச்சையான சொற்களைப் பயன்படுத்தி மிஸ்கின் நகைச்சுவையாகப் பேசியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் மன்னிப்புக் கேட்டு பேசினார் மிஷ்கின்.

பேட் கேர்ல் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியதாவது:

"மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்கள். பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வந்துள்ளேன் நான். நண்பர்கள் தானே..

முதலாவதாக நான் நன்றி சொல்வது, எனக்கு மிகவும் பிடித்தமான பாடலாசிரியர், எழுத்தாளர், சிறந்த பெண்மணி தாமரைக்கு. தாமரை என்னை விமர்சித்துப் பேசியிருந்தார். அதில் ஒரு வார்த்தையை அவர் குறிப்பிட்டிருந்தார். முதலில் அவரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். வெற்றி என்னை இப்படி பேச வைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

18 வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் என் மரணத்தைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறேன். வெற்றி என் தலை மேல் இருந்திருந்தால், இந்நேரம் நான் பெரிய பெரிய ஆள்களுக்குப் படம் செய்திருக்க வேண்டும். அதனால், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டாவது எனக்கு மிகவும் பிடித்த மிகச் சிறந்த ஆளுமை லெனின் பாரதி. அவர் என்னை விமர்சித்திருந்தார். அது தத்துவரீதியான விமர்சனம். அவருக்கும் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்பிறகு, நடிகர் அருள் தாஸ். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் முகத்தைப் பார்க்கும்போது, பழைய தமிழ் ஒன்று உள்ளே இருக்கும். அவர் முகத்தில் ஒரு கருணை இருக்கும்.

அவருடன் இணைந்துப் பணியாற்ற வேண்டும் என நிறைய நாள் நினைத்துள்ளேன். என்னை விமர்சனம் செய்து, அவர் மூன்று நாள்களில் பிரபலமாகிவிட்டார். அவருக்கு என் மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சசி என்னை நேற்றிரவு அழைத்திருந்தார். உன்னை ஏன் நான் அடக்கவில்லை என்றார். அந்த அன்புக்கு நன்றி. அவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். லட்சுமி ராமகிருஷ்ணன் மூன்று நாள்களாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் எதுவும் பேசவில்லை. அவர் என்ன பேசுவார்கள் எனத் தெரியும். அவர் என் தாயைப் போன்றவர். அவரிடத்திலும் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.

பிறகு, எனக்கு மிகச் சிறந்த படத்தைக் கொடுத்து என் தந்தை போல இருந்துகொண்டிருக்கும் தாணு. படத்தை எடுத்துக்கொண்டிருக்கும்போது இது மாதிரி சர்ச்சையாகும்போது தயாரிப்பாளராக அவரைப் பாதிக்கும். அவரிடத்தில் நான் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.

என் மீது செருப்பை எறிய வேண்டும் என்று சொன்ன நண்பர், அளவு எண் 8-ஐ கொண்ட செருப்பை ஜோடியாக எறிய வேண்டும். அவருக்கும் நான் என் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். இன்னொரு மனிதர் 18 வருடங்களாக என்னைத் திட்டிக்கொண்டே இருக்கிறார். இன்னும் 10 ஆண்டுகளுக்குப் படம் செய்தால், இன்னமும் அவர் என்னைத் திட்டுவார். அவரிடத்திலும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு நகைச்சுவையாகவே நான் அந்தப் பேச்சைப் பேசினேன். ஓரிரு வார்த்தைகள் மேலே சென்றுவிட்டது, அது அப்படிதான். மனதில் இருந்து பேசும்போது அப்படி ஆகிவிட்டது. அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால், நகைச்சுவை என்பது நகைச்சுவையாகவே இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு மனிதரை நான் விமர்சிக்கவே இல்லை. குறிப்பிட்டு ஒரு மனிதரைத் தாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததே இல்லை.

என்னைப் பற்றி சொல்ல வேண்டுமானால், என் படங்களைப் பார்த்து சொல்ல வேண்டும். நான் சினிமாவை நேசிப்பவன். சினிமாவையும் சினிமா மேடையையும் சினிமாவின் மனிதர்களையும் நேசித்துக்கொண்டே இருக்கிறேன். எனக்கு அதைத் தவற வேறு வேலை கிடையாது.

நான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை செய்தேன். முதல் நாள் அந்தப் படத்தை வெளியாக அனுமதிக்கவில்லை. மறுநாள் இரவுதான் அந்தப் படம் வெளியானது. 10 நாள்களுக்குப் பிறகு தொலைக்காட்சி உரிமைகளை வாங்க வந்தார்கள். அப்போது எனக்கு நெருக்கமான மனிதர், ஒரு பெரிய இயக்குநர் நிறைய பணம் வாங்கித் தருவதாகக் கூறி என்னை அழைத்துச் சென்றார். ஒரு பெரிய அறைக்குள் சென்றேன். என் நண்பன் அவன். அந்த அறையில் 20 பேர் இருந்தார்கள். ரூ. 75 லட்சத்துக்கு தொலைக்காட்சி உரிமையைக் கொடுப்பதாக இருந்தால் கொடு என்றார்கள்.

இந்தப் படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளேன். இது நல்ல படம். ரூ. 2 கோடி கொடுங்கள் என்றேன். கொடுக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, 20 தடியர்களை உள்ளே வைத்து என்னை மிரட்டி, என்னைக் கையெழுத்துப் போட வைத்தார்கள். ரூ. 75 லட்சம் கொடுத்தார்கள். அந்தத் திரைப்படம் அந்த சேனலில் இதுவரை 80 முறை வெளியாகியிருக்கிறது.

அந்த செக்கை கிழித்துப்போட்டு அவர்களிடத்தில் சொன்னேன், சென்னை வரும்போது ஒரு வெள்ளைக் காகிதமும் பென்சிலையும் மட்டும்தான் எடுத்து வந்தேன். அந்தளவுக்கு வறுமையானக் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். கஷ்டப்பட்டு திரும்ப வருவேன் என்றேன். கஷ்டப்பட்டு இந்த மேடையில் நிற்கிறேன் நான். அதில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டார்கள். எனக்குத் துரோகம் செய்த அந்த மனிதன், ஒரு பெரிய இயக்குநர். அவர் இன்னும் இருக்கிறார். ஒவ்வொரு தருணமும் நான் துரோகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன்.

என்னால் எப்படி ஒரு சக மனிதனைப் பார்த்து மோசமாகப் பேச முடியும்? பேச வேண்டிய கட்டாயம் உள்ளதா? எப்படியாவது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று, கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி பேசுகறேன்.

மன்னிப்புக் கேட்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். நண்பர்களே, நான் உங்கள் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு, உங்களையெல்லாம் கடவுளாக்குகிறேன்" என்றார் மிஷ்கின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in