
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து பட்டம் வென்றார் முத்துக்குமரன்.
கடந்த 7 வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல், அந்த நிகழ்ச்சியின் முக்கிய அடையாளமாகவே மாறியிருந்தார் கமல் ஹாசன். இந்நிலையில், பிக் பாஸ் 8-வது பருவத்தில் இருந்து கமல் ஹாசன் விலகுவதாக அறிவித்ததை அடுத்து, முதல்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்தாண்டு அக்.6-ல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.
தயாரிப்பாளர் ஃபேட்மேன் ரவிந்தர், நடிகை சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்.ஜே. ஆனந்தி, சுனிதா, பாடகர் ஜெஃப்ரி, நடிகர் ரஞ்சித், பவித்ரா ஜனனி, சௌந்தர்யா நஞ்சுண்டன், அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே. விஷால், அன்ஷிதா, அர்னவ், தொகுப்பாளர் முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த பருவத்தின் தொடக்கத்தில் ஆண்கள், பெண்கள் என பிக் பாஸ் வீட்டை இரண்டாகப் பிரித்து விளையாடிய நிலையில், பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடத் துவங்கினார்கள். தொடக்கத்தை விட, நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் பரபரப்பாக நகர்ந்தது. முந்தைய சீசன்கள் இல்லாத வகையில் பணப்பெட்டி ஆட்டத்தில் புதுமை புகுத்தப்பட்டது.
குறிப்பாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்குள் திரும்பாததால் போட்டியிலிருந்து ஜாக்குலின் வெளியேறினார். இதைத் தொடர்ந்து முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா மற்றும் ரயான் ஆகிய ஐவரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், பிக் பாஸின் இறுதி நாளான இன்று (ஜன.19) போட்டியிலிருந்து முதலில் வெளியேறினார் ரயான். இதைத் தொடர்ந்து பவித்ராவும், விஷாலும் வெளியேறினார்கள். இறுதியில், முதலிடம் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் முத்துக்குமரன். சௌந்தர்யாவுக்கு 2-வது இடம் கிடைத்தது.