
கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்று பிரபலமான மோனாலிசா என்ற இளம்பெண் 'சாட்கி' எனும் புதிய இசை ஆல்பத்தில் நடித்துள்ளார்.
மஹா கும்பமேளாவுக்காக உத்தரப் பிரதேசத்துக்கு ருத்ராட்ச மாலைகள் விற்கச் சென்றவர் இந்தூரைச் சேர்ந்த இளம் பெண் மோனாலிசா. மஹா கும்பமேளாவுக்குச் சென்ற சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், மோனாலிசாவைப் படம் பிடித்து பதிவேற்றம் செய்ய, இந்தியா முழுக்கப் பிரபலமடைந்தார் மோனாலிசா. தோற்றம், கண்கள், உடல்மொழி, பேச்சு என பலவிதங்களிலும் அனைவரையும் ஈர்த்தார்.
சமூக ஊடகங்கள் வழியாகப் பிரபலமானதைத் தொடர்ந்து, மஹா கும்பமேளாவில் மோனாலிசாவைத் தேடி கூட்டம் அலைமோதியது. மோனாலிசாவை நடிகையாக்கும் அளவுக்கு இந்தப் பிரபலம் உதவியது.
பாடகர் உட்கர்ஷ் சர்மா என்பவரின் 'சாட்கி' எனும் புதிய இசை ஆல்பத்தில் நாயகியாக நடித்துள்ளார் மோனாலிசா. இந்தப் பாடல் 3 நாள்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. யூடியூபில் இப்பாடல் 9.4 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மோனாலிசா நடிப்பில் வெளியாகும் முதல் கலைப் படைப்பு இது. இப்பாடலில் நடித்த அனுபவம் பற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு மோனாலிசா பேட்டியளித்துள்ளார்.
"பாடல் வாய்ப்பு வந்தவுடன் முதலில் என் குடும்பத்தினருடன் பேசுமாறு கூறினேன். அவர்கள் ஒப்புக்கொண்ட பிறகே நான் ஒப்புக்கொண்டேன். பாடலை முதன்முறையாகக் கேட்டபோதே எனக்குப் பிடித்திருந்தது. எனக்காகவே இப்பாடல் உருவாக்கப்பட்டதாகக் கூறினார்கள்" என்றார் மோனாலிசா.