
ஆஸ்திரேலியாவுக்கு மல்லிகைப் பூவுடன் சென்ற மலையாள நடிகை நவ்யா நாயருக்கு ரூ. 1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு கடந்த செப்டம்பர் 6 அன்று நடந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக மலையாள நடிகை நவ்யா நாயர் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சில் அவர் பேசும்போது அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வேடிக்கையாக வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது :
”நான் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்திற்காக ஆஸ்திரேலியா கிளம்பியதும் என் தந்தை எனக்கு மல்லிகைப்பூவை வாங்கிக் கொடுத்தார். நான் அதை இரண்டு துண்டுகளாக்கி, ஒரு துண்டைக் கைப்பையில் வைத்துக் கொண்டேன். ஒன்றைத் தலையில் சூடிக் கொண்டேன். சிங்கப்பூர் விமான நிலையம் வந்ததும் தலையில் வைத்திருந்த வாடிய பூவை அப்புறப்படுத்திவிட்டு, பையில் இருந்த பூவைச் சூடிக் கொண்டேன். ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அதிகாரிகள் என்னைச் சோதனை செய்தனர். அப்போதுதான் ஆஸ்திரேலியாவுக்கு மல்லிக்கைப் பூவைக் கொண்டு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரிந்தது.
இதனால் எனக்கு அபராதம் விதித்தனர். என் தலையில் சூடிக்கொண்ட 15 சென்டிமீட்டர் பூவுக்காக நான் 1980 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1.14 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டேன். இதை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்” என்று கூறினார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தாவரங்கள், விலங்குகளைக் கொண்டு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தங்கள் நாட்டு விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க அந்நாட்டு அரசு இந்தக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதை அறியாமலேயே நடிகை நவ்யா நாயகர் மல்லிகைப் பூவுடன் சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Navya Nair | Australia | Mollywood | Melbourne | Jasmine |