நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருவனந்தபுரம் காவல் துறையினர் நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பிறகு பாதிக்கப்பட்ட நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நடிகர் முகேஷ் மீதும், நடிகர் ஜெயசூர்யா மீதும் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்லால் அம்மா சங்கம் மீது அவதூறு பரப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மோகன்லால் பேசியதாவது: “அம்மா என்பது வெறும் சங்கம் அல்ல, அது ஒரு குடும்பம். துரதிர்ஷ்டவசமாக அந்தச் சங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மலையாளத் திரைத்துறையைச் சார்ந்த 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மா சங்கத்தை மட்டும் குறை கூற வேண்டாம். நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, 47 வருடங்களாக ரசிகர்களுடன் பயணித்துள்ளேன். மற்ற திரையுலகில் நடக்கும் பிரச்னைகளை விட இங்கிருக்கும் நிலைமை பரவாயில்லை என்பேன். என்னுடைய அறிக்கையை ஹேமா கமிஷனிடம் கொடுத்துள்ளேன். பாலியல் புகார் தொடர்பாக அரசும் நீதிமன்றமும் தங்களின் கடமையை செய்கின்றனர். இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் உள்ள கடைநிலை தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடாது” என்றார்.