கைது குறித்த காரணத்தை தன்னிடம் தெளிவாக சொல்லவில்லை என்று இயக்குநர் மோகன் ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி நேற்று (செப். 24) காலை சென்னையில் கைது செய்யப்பட்டார். பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக ஊடகத்துக்கு அளித்த பேட்டியொன்றில் மோகன் ஜி விமர்சனம் செய்து பேசியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மோகன் ஜியின் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு திருச்சி நீதிமன்றத்தில் மோகன் ஜி ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவரை சொந்தப் பிணையில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன் ஜி, “நேற்று என்னை கைது செய்தபோது எனக்கு எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை. என் மனைவி மற்றும் வழக்கறிஞரிடமும் என்னை பேச அனுமதிக்கவில்லை. அருகில் இருக்கும் ராயபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி என்னை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றி தாம்பரம், திருச்சி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
நான் கேட்ட கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை. திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ஆந்திர முதல்வரே பேசியதால்தான், நானும் அதுபோன்ற ஒரு கருத்தை தெரிவித்தேன். ஆனால் அது தவறான முறையில் போய் சேர்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கைது குறித்த காரணத்தையும் என்னிடம் தெளிவாக சொல்லவில்லை. நான் விழிப்புணர்வு ஏற்படுத்தவே அப்படி பேசினேனே தவிர, யாரையும் தாக்கும் நோக்கத்தில் பேசவில்லை” என்று தெரிவித்துள்ளார்.