பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தாதா சாகேப் பால்கே விருது என்பது திரைத்துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதாகும். லதா மங்கேஷ்கர், அமிதாப் பச்சன், தமிழ் திரையுலகில் சிவாஜி, கே. பாலசந்தர், ரஜினி போன்றவர்கள் இந்த விருதினை பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் வருகிற அக். 8 அன்று நடைபெறும் 70-வது தேசிய திரைப்பட விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மிர்கயா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மிதுன் சக்ரவர்த்தி தனது முதல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
இதைத் தொடர்ந்து ‘டிஸ்கோ டான்சர்’ படம் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹிந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற இவர், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் எம்.பி. யாகவும் பணியாற்றினார்.