ஜான்வி கபூர் படத்தைத் தயாரிக்கும் மார்டின் ஸ்கார்சிசி!

நீரஜ் கேவானின் மசான் படத்தால் ஈர்க்கப்பட்ட ஸ்கார்சிசி, அவருடைய அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார்.
ஜான்வி கபூர் படத்தைத் தயாரிக்கும் மார்டின் ஸ்கார்சிசி!
படம்: https://www.instagram.com/karanjohar
1 min read

உலகப் புகழ்பெற்ற ஜாம்பவான் இயக்குநர் மார்டின் ஸ்கார்சிசி ஜான்வி கபூர் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகியுள்ளார்.

நீரஜ் கேவான் 2015-ல் இயக்கிய மசான் திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது. கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டபோதும் இது பாராட்டுகளைக் குவித்தது. மசான் மூலம் புகழ்பெற்ற நீரஜ் கேவானின் அடுத்த படம் ஹோம்பவுண்ட். இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளார்கள். கரண் ஜோஹரின் தர்மா புரோடக்‌ஷன்ஸ் இதைத் தயாரித்துள்ளது.

இந்தப் படம் கான்ஸ் திரைப்பட விழாவில் அடுத்த மாதம் திரையிடப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக மார்டின் ஸ்கார்சிசி பொறுப்பேற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படம் குறித்து மார்டின் ஸ்கார்சிசி கூறியதை கரண் ஜோஹர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீரஜ் கேவானின் ஹோம்பவுண்ட் குறித்து மார்டின் ஸ்கார்சிசி குறிப்பிட்டுள்ளதாவது:

"நீரஜின் முதல் படமான மசானை 2015-ல் பார்த்தேன். அது எனக்குப் பிடித்திருந்தது. அவருடைய இரண்டாவது படம் குறித்து என்னிடம் தெரிவித்தார்கள். மிகவும் ஆர்வமாக இருந்தேன். அதன் கதை, கலாசாரம் எனக்குப் பிடித்திருந்தது. எனவே, படத்துக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். நீரஜ் அழகாக படத்தை வடிவமைத்துள்ளார். இந்திய சினிமாவுக்குக் குறிப்பிடத்தக்க ஒரு பங்களிப்பு இது" என்று மார்டின் ஸ்கார்சிசி குறிப்பிட்டுள்ளார்.

தி வூல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட், குட்ஃபெலாஸ், டாக்ஸி டிரைவர் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி புகழ்பெற்றவர் மார்டின் ஸ்கார்சிசி. இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் ஸ்கார்சிசி தான் பலருக்கு ஆதர்சம். இவர் கடைசியாக எடுத்த படம் கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன். இது 10 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கானப் போட்டியில் இருந்தது.

நீரஜ் கேவானின் ஹோம்பவுண்ட் படத்தில் மார்டின் ஸ்கார்சிசி இணைந்துள்ளது படக் குழுவினரைப் பெருமளவு மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அனைவரும் தங்களுடைய உணர்வுகளை சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in