திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில் கருங்குளம் பகுதியை நெருங்கும்போது, சாலையின் இருபுறமும் வாழைத்தோப்பு இருக்கும். கண்கள் எட்டும் தூரம் வரை வாழை மரங்கள் தாம். சாலையை ஒட்டி வரவேற்புத் தோரணங்களாக வாழை இலைகள் காற்றில் அசைபோட்டுக் கொண்டிருக்கும். இந்த வாழைத்தோப்புகளுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும், உழைப்புச் சுரண்டலும் நீதியும் தான் மாரி செல்வராஜின் 'வாழை'.
படம் தொடக்கத்திலேயே தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த வாழை என்பதை வெளிப்படையாகவே அறிவிக்கிறார்.
சிவனைந்தான் வசிக்கும் புளியங்குள மக்களுக்கு வாழைத்தாரை சுமப்பதுதான் பொருள் ஈட்டுவதற்கான வழி. பள்ளி விடுமுறை நாள்களில் மக்களுடன் பள்ளிச் சிறுவர்களும் வாழைத்தாரைச் சுமக்கச் செல்வார்கள். காரணம் வறுமை. கதாபாத்திரங்கள் வாழைத்தாரைச் சுமப்பதைக் காட்சிப்படுத்திய விதமும் அந்தக் காட்சிகளின் நீளமும் பார்வையாளர்களிடமும் வாழைத்தார் சுமையை உணரவைக்கின்றன.
இதுபோன்ற தொடர்ச்சியான காட்சிகள் மூலம் மக்களை கிளைமாக்ஸுக்கு மிகச் சரியாகத் தயார்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இவற்றுக்கு மத்தியில் சுட்டியாக வாழ்ந்து வரும் சிறுவன்தான் சிவனைந்தான். இவனுடைய பார்வை மூலம் பதற்றமான ஒரு தேடலிலிருந்துதான் வாழை தொடங்குகிறது. மறைந்த அப்பா (கம்யூனிஸ்ட்), அம்மா, அக்கா, நண்பன் சேகர், கனி அண்ணன் (ஊரின் துடிப்பான இளைஞர்), ரஜினி, வீட்டில் வளர்க்கும் பசு, கருங்குளம் அரசுப் பள்ளி, பூங்கொடி டீச்சர். இதுதான் சிவனைந்தானின் உலகம். இவற்றுடன் வாழை. இதில் வாழையைத் தவிர்த்து மற்ற அனைத்துமே சிவனைந்தானுக்கு சந்தோஷம். வாழை என்றால் மட்டும் குமட்டல்.
வாழைத்தார் சுமப்பது சிவனைந்தானுக்கு எந்தளவுக்கு உளவியல் சிக்கலாக இருக்கிறது?. இதை லாரி ஹாரன் சப்தங்கள் மூலம் காட்டிய விதம் நன்றாக இருந்தது. இதிலிருந்து சிவனைந்தானைக் காப்பாற்றுவது பள்ளி. இதனாலோ என்னவோ, படிப்பில் புலியாக இருக்கிறான் சிவனைந்தான்.
இதுதான் வாழையின் உலகம் என்று நேரமெடுத்து அறிமுகம் செய்தவுடன், படிப்படியாக கிளைமாக்ஸுக்கு நகர்கிறார் மாரி செல்வராஜ். கிளைமாக்ஸை நோக்கிய இந்தப் பயணத்தில் சிவனைந்தான், சேகர் இடையிலான காட்சிகள் அற்புதமாக வந்துள்ளன. இவர்களுடைய சேட்டைகள் நம்மைச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன. குறிப்பாக, "நான்லாம் கமல் ரசிகன். முள் குத்தாமலே முள் குத்தியதைப்போல நடிப்போம், நம்மூரில் கமல் படம் எங்கே ஓடுகிறது" என கமல் ரசிகனான சேகர், ரஜினி ரசிகனான சிவனைந்தானிடம் பேசும் காட்சிகள் அனைத்தும் தியேட்டரில் விசிலை அள்ளின. இதேசமயம், சிவனைந்தானுக்கு எந்தளவுக்கு அன்புக்குரியவனாக சேகர் இருக்கிறான் என்பதும் புரிந்துகொள்ள முடிகிறது.
சிவனைந்தான் - பூங்கொடி டீச்சர் காட்சிகளும் எந்த சொதப்பலும் இல்லாமல் வந்தது படத்தின் மற்றொரு பக்கபலம். பள்ளிச் சிறுவன் வாழ்க்கையில் எப்போதெல்லாம் ஆசிரியர் வருவாரோ, அதே அளவில்தான் இதிலும் வருகிறார் பூங்கொடி டீச்சர். படம் என்பதற்காகவோ, திருப்புமுனையை உண்டாக்குகிறவர் என்பதற்காகவோ இவருக்கான பிரத்யேக கதை விவரிப்பு என்று எதுவும் இல்லை.
அதேசமயம், சில காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. காரணம், படத்தின் இறுதியில் இதை எதற்காகவோ பயன்படுத்தப்போகிறார்கள் என்பதை நம்மால் முன்கூட்டிய ஊகிக்க முடிகிறது. இதற்கு சரியான உதாரணம் சேகர் கதாபாத்திரம்.
படத்தில் சிவனைந்தானின் அம்மாவாக வருபவர், திவ்யா துரைசாமி, கலையரசன், சேகராக வரும் ராகுல் என அனைவரும் மிகச் சிறப்பாக தங்களுடைய பணியைச் செய்துள்ளார்கள். குறிப்பாக சிவனைந்தானின் அம்மாவாக வருபவர் மிரட்டியிருக்கிறார். இவருடைய வறுமையும், காய்ச்சலும் நமக்கும் தொற்றிவிடுகிறது.
கூலியை உயர்த்திக் கேட்க முனையும் இடங்களாக இருக்கட்டும், குடும்ப நிலையை விவரிக்கும் இடங்களாக இருக்கட்டும் வசனங்கள் அழுத்தமாக வந்துள்ளன. குறிப்பாக, படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கும் சிவனைந்தானுக்கு உழைப்பைப் பற்றி தெரிய வேண்டும் என அவனுடைய அம்மா பேசும் இடமும், வசனமும் ஒரு நொடி நம்மை அடித்துவிட்டுச் செல்கிறது. சந்தோஷ் நாராயணனின் பாடல்கள், பின்னணி இசையைக் காட்டிலும் 80, 90-க்களில் வெளியான பாடல்கள் மற்றும் இவற்றின் இசையே வாழையின் பெரும் அங்கமாக உள்ளன.
அன்றாட வாழ்க்கையில் நாம் எதார்த்தமாக செய்யக்கூடிய சாதாரண விஷயங்கள், வறுமையின் பிடியிலும் சாதியின் ஒடுக்குமுறையிலும் சிக்கியிருக்கக்கூடிய மக்களுக்கு எவ்வளவு சவாலானது என்பது பிரசாரமாக அல்லாமல் காட்சிகளாக நம்மை வந்தடைகிறன்றன.
படம் முடிந்து பெயர்கள் வரும்போது திரையரங்குகளில் அனைவரும் எழுந்து செல்வதைப் பார்த்துத்தான் எனக்குப் பழக்கம். இதில் படம் முடிந்த பிறகும் அனைவரும் அமர்ந்திருப்பது வாழை அதன் நோக்கத்தை அடைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மொத்தத்தில் ஒரு பெரும் துயரிலிருந்து கலையால் காப்பாற்றப்பட்ட, வலி மிகுந்த கலைஞன் ஒருவன், தன் ஊருக்கும் தன் மக்களுக்கும் கலையின் ஊடாகச் செய்துள்ள சமர்ப்பணம் - வாழை.