ஒரு எளிய உண்மை தமிழ்ச் சமூகத்தை எந்த அளவுக்கு தொந்தரவு செய்கிறது என்பதை படம் வெளியான பிறகு புரிந்துகொள்வதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெளியான படம் வாழை. இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
இந்நிலையில் ‘வாழை’ படத்தின் வெற்றிவிழா சென்னையில் நேற்று (செப்.16) நடைபெற்றது.
இதில் பேசிய மாரி செல்வராஜ், “என் ஊர் மக்களுக்காகதான் நான் படம் எடுக்கிறேன். அவர்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்பதற்காக தான் அவ்வாறு செய்கிறேன். ஒவ்வொரு மேடையிலும் என் ஊர் மக்கள் கொண்டாடப்படுவதை விட வேறு எது எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்க போகிறது. எனது ஊரில் நிறைய கதைகள் இருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு முறையும் என் ஊர் சார்ந்த படங்களை எடுக்கிறேன். ஒரு எளிமையான கதை என்னிடம் இருக்கிறது, அதனை கலையாக மாற்ற கஷ்டப்படுகிறேன். ஒரு எளிய உண்மை தமிழ்ச் சமூகத்தை எந்த அளவுக்கு தொந்தரவு செய்கிறது என்பதை நான் படம் வெளியான பிறகு புரிந்துகொள்கிறேன். வலியதைவிட எளியதுக்கே மதிப்பு அதிகம். எனவே இதுபோன்று பல எளிமையானக் கதைகளை கொடுக்கும் என் மக்களுக்கு நன்றி. எனக்கு எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சரி, எனது மக்களுக்கு கலையின் வழியாக கதைகளைக் கொடுப்பது தான் எனது வேலை.
நிகிலா விமல் படத்தின் இறுதியில் ஏன் வரவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பினர். நிகிலா விமலின் கால்ஷீட் கிடைக்காததால் தான் எடுக்க முடியவில்லை. டீச்சரின் மடியில் அந்த சிறுவன் படுத்திருப்பது போன்று ஒரு காட்சியை யோசித்து வைத்திருந்தேன். ஒருவேளை அது நடந்திருந்தால் நிறைய பேர் கேட்ட மோசமான கேள்விகளுக்கு அந்த காட்சி பதிலாக இருந்திருக்கும். ஆனால் அந்த காட்சியை தவறவிட்டேன். என் வாழ்கையில் நான் மிகவும் வருத்தப்பட்டது இந்த ஒரு விஷயத்துக்காகதான். நிஜ வாழ்க்கையில் அப்படி உண்மையிலேயே நடந்தது. அனைத்து டீச்சர்களும் வாழை தோப்பில் உடல்களை அடக்கம் செய்யும் வரை அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தார்கள். இந்த நேரத்தில் அவர்கள் அவைருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களால் அந்த காட்சிகளை படங்களில் வைக்க முடியவில்லை” என்றார்.
முன்னதாக, வாழை படத்தை ஆபாசப் படம் என்று பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தார்.