

போதைப் பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கில், காவல் துறையினர் கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மண்ணடியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைதாகினர்.
இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து, காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதனை அறிய தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறையில் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த மாணவர்களின் அறையில் இருந்து பல்வேறு வகையான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அலிகான் துக்ளக்கை காவல் துறையினர் கைது செய்தனர். ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அலிகான் துக்ளக் உள்பட 4 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக அலிகான் துக்ளகுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.