பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதியின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ் பாரதி. சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களிலும் அவர் நடித்தார். 2023-ல் மார்கழித் திங்கள் என்கிற படத்தையும் இயக்கியிருந்தார். 2022-ல் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
மனோஜ் பாரதிக்கு அண்மையில் இருதய சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் நேற்று காலமானார். இவருடைய உடல் முதலில் சேத்துப்பட்டிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பிறகு, மனோஜ் பாரதியின் உடல் நீலாங்கரையிலுள்ள பாரதிராஜாவின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று பிற்பகல் சுமார் 3 மணி வரை நீலாங்கரை பாரதிராஜா இல்லத்தில் மனோஜ் பாரதியின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
விஜய், சரத் குமார், நாசர், சத்யராஜ், சூர்யா, சிவகுமார், கேஎஸ் ரவிக்குமார், ஸ்நேகன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மனோஜ் பாரதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மனோஜ் பாரதியின் உடல் பிற்பகல் 3 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மின்மயானத்தில் குடும்பத்தினர் மத்தியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.