இளையராஜாவின் இசையும் அனுமதியும்: 96 இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தினோம் என்பதை விட, அது அவருடைய இசைக்கான எங்கள் சமர்ப்பணம்.
இளையராஜாவின் இசையும் அனுமதியும்: 96 இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்

மஞ்ஞும்மல் பாய்ஸ், 96 படங்களில் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்றது குறித்து அப்படத்தின் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

96 மற்றும் சமீபத்தில் வெளியான மஞ்ஞும்மல் பாய்ஸ் படங்களில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து யூடியூப் சேனலில் வெளியான ஒரு செய்திக்கு 96 இயக்குநர் பிரேம்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு யூடியூப் சேனலில் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் வெளியான மஞ்ஞும்மல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 படங்களில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார்.

'96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறைந்த இந்தக் கருத்துகளுக்குப் பதில் சொல்லாமல் என்னால் கடந்து செல்ல இயலவில்லை.

மஞ்ஞும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கும், 96 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுக்கும் Think Music வாயிலாகவும், அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும், இரண்டு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்னரே அதற்கான அனுமதியை பணம் செலுத்தி பெற்றுவிட்டோம்.

ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்துகொண்டு இந்த முக்கியமான தகவலை கூட விசாரிக்காமல், அல்லது அந்த உண்மையை உள்நோக்கத்துடன் மறைத்து பொய் கூறியதேன்? ஒரு காணொளியின் சுவாரசியத்தை கூட்டுவதற்கு ஒரு செய்தியாளரின் அடிப்படை அறத்தை விட்டுக்கொடுப்பதா?

மஞ்ஞும்மல் பாய்ஸ் மற்றும் 96 திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தினோம் என்பதை விட, அது அவருடைய இசைக்கான எங்கள் சமர்ப்பணம். இசைஞானியின் இசையை கேட்டு பிறந்து, வளர்ந்த தலைமுறை நாங்கள்.

96 பற்றி இசைஞானி இளையராஜா ஒரு அறிக்கை வெளியிட்டார் என்று சொல்கிறார். தவறு, அது ஒரு நேர்காணலில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில். அதற்கான உரிய விளக்கத்தை நாங்கள் கொடுத்த பிறகு அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது.

மேலும், அதற்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் மன்னிப்பு கேட்டதாக ஒரு பொய்யான தகவலையும் சொல்கிறார். முதலில் 96 படத்தின் இசையமைப்பாளர் பெயர் கோவிந்த் வசந்தா. கோவிந்த் வசந்த் அல்ல. அடுத்ததாக அவர் எந்த மன்னிப்பும் கேட்கவே இல்லை.

எங்களைப் பற்றிய உண்மையைதான் சொல்ல வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், எங்களைப் பற்றி பொய்யும் சொல்ல வேண்டாம்.

சினிமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல. சினிமாவைப் பற்றி விமர்சித்து செய்தி வழங்கும் செய்தியாளர்களுக்கும் அது சொந்தமானதுதான். சினிமாவைப் பாதுகாப்பது இருவரின் கடமைதான்.

கடந்த காலத்தில் 96 திரைப்படத்திற்கு வந்த ஒரு முக்கியமான பிரச்னையை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் துணையோடுதான் தீர்வு கண்டு, மீண்டு வர முடிந்தது. அந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன்.

ஐந்து வருடங்கள் கடந்தும், மீண்டும் ஒரு பிரச்னை வந்துள்ளது. தன்னிலை விளக்கம் அளிக்கவும், உண்மையை நிலைநாட்டவும் எனக்கு வேறு வழி தெரியவில்லை, உங்களையே மீண்டும் நாடுகிறேன். உண்மை விளங்கட்டும். நன்மை விளையட்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in