குக் வித் கோமாளி தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கு பலரும் ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5-ல் தொகுப்பாளராகப் பணியாற்றிய பிரபல தொகுப்பாளர் மணிமேகலை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். மேலும், இதற்கான காரணத்தை அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
மணிமேகலை தனது யூடியூப் சேனலில், “சுய மரியாதையைவிட முக்கியமானது எதுவுமில்லை, என் வாழ்க்கையின் அனைத்துச் சூழலிலும் நான் அதைப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் என இவை அனைத்தையும் விட சுய மரியாதை தான் முக்கியம். இந்த சீசனில் மற்றொரு தொகுப்பாளினி, ஒரு குக்-காக தனது கடமையைச் செய்ய மறந்து, என்னுடைய வேலையில் குறுக்கிட்டு ஆதிக்கம் செலுத்தினார். அதனால் நான் விலகுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மணிமேகலை குறிப்பிட்ட அந்தத் தொகுப்பாளினி, பிரியங்கா என்பதால் சமூகவலைத்தளங்களில் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மீண்டும் பங்கேற்க வேண்டும் என்றும் சமூகவலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சர்ச்சை தொடர்பாக பிரியங்கா தரப்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.