மம்மூட்டியின் எந்தவொரு படமும் தேசிய விருதுக்கு அனுப்பப்படவில்லை என தேசிய விருது ஜூரி உறுப்பினரான பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
70-வது தேசிய விருதுகள் கடந்த 14 அன்று அறிவிக்கப்பட்டன. ஒருபுறம் தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்குப் பாராட்டு மழை பொழிகின்றன. மறுபுறம், தேசிய விருதுக்குத் தகுதியானவர்களுக்கு விருது அறிவிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கார்கி படத்துக்காக சாய் பல்லவிக்கு சிறந்த நடிக்கைக்கான தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விருதை திருச்சிற்றம்பலம் படத்துக்காக நித்யா மேனன் தட்டிச் சென்றார். சாய் பல்லவிக்கு விருது அறிவிக்கப்படாதது தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன.
மலையாளத்தில் மம்மூட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்படாதது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் 2022-ல் வெளியானது. இதில் மம்மூட்டியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்படாதது பேசுபொருளானது.
இந்த நிலையில், இயக்குநரும் தேசிய விருது ஜூரி உறுப்பினருமான எம்பி பத்மகுமார் மம்மூட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்படாதது குறித்து விளக்கமளித்துள்ளார்.
மனோரமா ஆன்லைனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
"மம்மூட்டியின் சிறப்பான படங்களில் ஒன்றான நண்பகல் நேரத்து மயக்கம் 2022-ல் வெளியானது. தேசிய விருதுகளில் கடுமையான போட்டியாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மம்மூட்டி நடித்த எந்தவொரு படமும் தேசிய விருதுக்கு அனுப்பப்படவில்லை என்பதுதான் உண்மை. மக்கள் மிகவும் வேகமாக அரசை விமர்சித்துவிடுகிறார்கள். மம்மூட்டியின் படங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுதான் நிஜம். இந்த முடிவை எடுத்தது யார் என்பதைதான் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
தேசிய விருது ஜூரி உறுப்பினர்களில் ஒருவராக இருந்துள்ளேன். வெளியிலிருந்து எந்தவொரு தலையீடும் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அப்படி ஏதேனும் தலையீடு இருந்தால், அது அரசு தலையீடாக இருக்காது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எதிர்மறையான கதையை உருவாக்குவதைப் பார்க்க வேதனையாக உள்ளது. நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற முக்கியமான படத்தைச் சமர்ப்பிக்காமல் போனது குறிப்பிடத்தக்க ஒரு தவறு. இது மம்மூட்டிக்கு மட்டுமான இழப்பு அல்ல, ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் இழப்பு" என்றார் பத்மகுமார்.