பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் கார் தருமபுரி அருகே விபத்துக்குள்ளானதில் அவருடைய தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ. சிபி சாக்கோவின் மருத்துவப் பரிசோதனைக்காக ஷைன் டாம் சாக்கோ, அவருடைய சகோதரர் ஜோ ஜான் சாக்கோ ஆகியோர் சிபி சாக்கோவுடன் கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து கார் மூலம் பெங்களூரு புறப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு வழியாக செல்ல முற்பட்டபோது, இன்று காலை தருமபுரியை அடைந்துள்ளார்கள். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அருகே ஷைன் டாம் சாக்கோவின் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதியதாகத் தெரிகிறது.
இவ்விபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவருடைய சகோதரர் விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதலில் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. கார் ஓட்டி வந்த அவருடைய மேலாளரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிபி சாக்கோவின் உடல் தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.