ஜனநாயகன் தணிக்கை வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் | Jana Nayagan |

தணிக்கை சான்றிதழ் பெற பல நடைமுறைகள் உள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பது ஏன்....?
ஜனநாயகன் தணிக்கை வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம்
ஜனநாயகன் தணிக்கை வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம்
2 min read

ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தனி நீதிபதி பி.டி. ஆஷா முன்பு கடந்த ஜனவரி 7 அன்று விசாரணைக்கு வந்தது. அதன் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் உடனடியாக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரப்பட்டது. அதற்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்ஸவா அனுமதி அளித்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனு விசாரணை

இந்த மனு இன்று மதியமே சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்த்வா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோரது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு எதிராக அவசரமாக மேல்முறையீடு செய்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சாலிசிட்டர் ஜென்ரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் பதிலளித்தார்.

பதிலளிக்க அவகாசம் தரவில்லை

அவர் கூறியதாவது:- “ஜனநாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. ஜனவரி 7 அன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உடனடியாக சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் தரப்பில் மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்யக் கோரப்படாத நிலையில், தனி நீதிபதி அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார். தணிக்கை முடிவு குறித்து டிசம்பர் 22 அன்றே தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளார்கள்” என்று வாதிட்டார்.

மனுதாரர் கோராத நிவாரணம் தரப்பட்டுள்ளது

தொடர்ந்து வாதிட்ட சாலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா கூறியதாவது: “எங்களுக்குப் பதிலளிக்க உரிய வாய்ப்பு தரவில்லை. தனி நீதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளார். மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடராத நிலையில், மனுதாரர் கோராத நிவாரணத்தைத் தனி நீதிபதி வழங்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.

பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன

படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதாடியபோது, “பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்ட பின்பும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஜனவரி 9 அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் தான் மனு அவசரப்படுத்தப்பட்டது. தணிக்கை வாரிய உறுப்பினரே புகார் தெரிவித்ததாகக் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.

நீதிமன்றத்திற்கு அழுத்தம் தருகிறீர்கள்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: “தணிக்கைச் சான்றிதழைப் பெற பல்வேறு நடைமுறைகள் இருக்கும்போது, பொறுமையாகக் காத்திருக்காமல் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள். வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பே தயாரிப்பாளர் எப்படி வெளியீட்டுத் தேதியை நிர்ணயிக்க முடியும்? தணிக்கை வாரியம் பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்விகளை எழுப்பினர்.

தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை

இதைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பி.டி. ஆஷா அளித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 21-க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Summary

The Madras High Court on Friday (January 9) temporarily stayed the single judge's order delivered earlier today directing CBFC to forthwith grant U/A Certificate for Tamil film 'Jana Nayagan' starring Vijay.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in