ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மனு திரும்பப் பெறப்பட்ட நிலையில், வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தனி நீதிபதி பி.டி. ஆஷா முன்பு கடந்த ஜனவரி 7 அன்று விசாரணைக்கு வந்தது. அதன் தீர்ப்பில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தணிக்கை வாரியம் மேல் முறையீடு
உடனே இதனை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை கடந்த ஜனவரி 9 அன்று விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாத்சவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின் வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையில் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரித் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, கடந்த ஜனவரி 15 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளதால் தலையிட விரும்பவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இதனடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த நிலையில், கடந்த ஜனவரி 27 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய கால அவகாசம் அளித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிடப்பட்டது.
படத்திற்கு மறு தணிக்கை
இதற்கிடையில் நேற்று (பிப். 9) ஜனநாயகன் படத்திற்குச் சான்றிதழ் கோரி மறு தணிக்கைக்கு படக்குழு அனுப்பி வைத்ததாகச் செய்திகள் வெளியாகின. மறு தணிக்கைக்குப் பிறகு பட்டியலிடப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும், அதனால் படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறையலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் மறுதணிக்கை செய்யப்பட்டு, சான்றிதழ் பெறப்பட்டு, அடுத்த 20 நாள்களில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கை திரும்பப் பெற்ற தயாரிப்பு நிறுவனம்
இந்நிலையில் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரிய மனுவைத் திரும்பப் பெறுவதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தனி நீதிபதி பி.டி. ஆஷாவிடம் கடிதம் வழங்கப்பட்டது. அக்கடிதத்தில் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி இருப்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்த விரும்பவில்லை. அதனால் மனுவை திரும்ப பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி. ஆஷா வழக்கைத் திரும்பப் பெற அனுமதி அளித்தார். மேலும், சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.
The Madras High Court has dismissed the case after the production company's petition seeking an order to issue a censor certificate to the film Janyayan was withdrawn.