நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

படத் தயாரிப்புக்காக சிவாஜியின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
1 min read

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரு மகன்கள் உள்ளார்கள். ராம்குமாரின் மகன் துஷ்யந்தும், அவரது மனைவி அபிராமியும் ஈஷன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளார்கள்.

இந்த ஈஷன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தால், சில ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில், எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 3.74 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை 30 சதவீத வட்டியுடன் திருப்பியளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஜெகஜால கில்லாடி படத்தின் தயாரிப்பு பாதியிலேயே நின்றுபோனதால், திட்டமிட்டபடி இந்த கடன் தொகை திருப்பியளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தன பாக்கியம் எண்டர்பிரைசஸ் அளித்த புகாருக்கு தீர்வு காணும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, கடனுக்கான அசல் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ. 9.02 கோடியை தனபாக்கியம் எண்டர்பிரைசஸுக்கு ஈஷன் நிறுவனம் வழங்குவது மட்டுமல்லாமல், ஜெகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கவேண்டும் என்று ஈஷன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு கடந்தாண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி ரவீந்திரன்.

ஆனால் நீதிபதியின் உத்தரவுப்படி வட்டியுடன் சேர்த்து கடன் தொகை திருப்பி அளிக்கப்படவில்லை. இதை ஒட்டி, நிலுவையில் உள்ள கடன் தொகையான ரூ. 9.39 கோடியைப் பெறும் வகையில், ராம்குமார் தந்தை சிவாஜி கணேசனின் `அன்னை இல்லம்’ வீட்டை ஐப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தன பாக்கியம் எண்டர்பிரைசஸ்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பதில் மனு தாக்கல் செய்ய ஈஷன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கினார். ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யாததால், `அன்னை இல்லம்’ வீட்டை ஜப்தி செய்ய இன்று உத்தரவிட்டார் நீதிபதி அப்துல் குத்தூஸ்.

இந்த உத்தரவு தொடர்பாக சம்மந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 5-க்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in