
வெற்றி மாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
டீசரில் சிறார்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக சங்கரன் கோவிலைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள திரைப்படம் பேட் கேர்ள். பிரபல இயக்குநர்கள் வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் படத்தைத் தயாரித்துள்ளார்கள். அஞ்சலி சிவராமன், ஷாந்தி பிரியா, டீஜே அருணாச்சலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
ஜனவரியில் வெளியான டீசர்
படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதமே வெளியானது. டீசர் வெளியான பிறகு படத்துக்கு ஆதரவும் வந்தது, விமர்சனமும் வந்தது. குறிப்பாக, பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக வரும் முக்கியக் கதாபாத்திரத்தைப் படத்தில் காட்டிய விதத்தைப் பலர் விமர்சித்து வந்தார்கள். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது.
இதனிடையே, இப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என படக் குழு அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் படக் குழு தெரிவித்திருந்தது.
ஏற்கெனவே, இப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கக் கூடாது என கோவையைச் சேர்ந்த ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கத்தின் நிறுவனர் ரமாநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த பிப்ரவரியில் தணிக்கை வாரியம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தணிக்கை வாரியச் சான்றிதழுக்காகப் படம் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
புதிய சிக்கல்
தற்போது படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. சங்கரன் கோவிலைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் ரமேஷ்குமார் உள்பட மூன்று பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பேட் கேர்ள் டீசருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. டீசரில் சிறார்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள், இதைப் பாலியல் குற்றமாகக் கருத வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், சமூக ஊடகங்களிலிருந்து டீசரை நீக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பேட் கேர்ள் படத்தின் டீசரை யூடியூப் உள்பட சமூக ஊடகங்களிலிருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்றதிலிருந்து ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சிக்கலால், படம் திட்டமிட்டப்படி செப்டம்பரில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் குவிந்த பாராட்டுகள்
முன்னதாக, சர்வதேச திரைப்பட விழாக்களில் பேர்ட் கேர்ள் படம் பாராட்டுகளைப் பெற்று வந்தது. ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆசியப் படத்துக்கான விருதை வென்றது. ஸ்பெயினில் வேலன்சியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த முழு நீளப் படத்துக்கான இளம் ஜூரி விருதை வென்றது.
Bad Girl | Varsha Bharat | Vetri Maaran | Bad Girl Teaser | Madras High Court | Madras High Court Madurai Bench |