போதைப்பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்குப் பிணை | Srikanth | Krishna | Drugs Case

ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
1 min read

Actors Srikanth, Krishna bail plea: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் இரவு விடுதியொன்றில் கடந்த மே 22 அன்று மது அருந்தச் சென்ற இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் துறை சார்பில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இவர்களில் பிரசாத் என்பவரும் ஒருவர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவற்றில் ஒன்று போதைப்பொருள் விற்பனை. நடிகர் ஸ்ரீகாந்த் இவரிடமிருந்துதான் கொக்கைன் எனும் போதைப்பொருளைப் பெற்று பயன்படுத்தியுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகின. இதைத் தொடர்ந்தே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஜூன் 25 அன்று வழக்கறிஞர்களுடன் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிவில் ஜூன் 26 அன்று நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.

சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பிணை கோரி இருவரும் தாக்கல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்தார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ஸ்ரீகாந்துக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள்களுக்கான தடயங்கள் இருந்தன எனக் கூறப்பட்டன.

ஸ்ரீகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிய மனுவில், காவல் துறையினர் தன்னைக் கைது செய்து 4 மணி நேரத்துக்குப் பிறகே பரிசோதனை செய்ததாகவும் இடையில் உணவு, தண்ணீர், காஃபி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவற்றை உட்கொண்டபிறகே வாந்தி வந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஸ்ரீகாந்த் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தன்னிடமிருந்து போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் கைது செய்யப்பட்ட இருவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே தாங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜூலை 8 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல் குமார் அறிவித்தார். இதன்படி இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்குப் பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை இருவரும் புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in