ஜனநாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் வழக்கு: ஜன. 9-ல் தீர்ப்பு | Jananayagan |

புதிய உறுப்பினர்களும் படத்தைப் பார்க்க வேண்டும். அதற்கு 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்...
ஜனநாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் வழக்கு: ஜன. 9 அன்று தீர்ப்பு
ஜனநாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் வழக்கு: ஜன. 9 அன்று தீர்ப்பு
2 min read

விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குதல் தொடர்பான வழக்கில் ஜனவரி 9 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்க்கு இது கடைசிப்படம் என்றும் கூறப்படுகிறது.

தணிக்கை சான்றிதழில் சிக்கல்

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுத் தேதியை நெருங்கிவிட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் தாமதம் செய்து வருகிறது. இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது. இது அவசர வழக்காக நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் நேற்று (ஜன. 6) விசாரணைக்கு வந்தது.

படம் வெளியாகாமல் எப்படி புகார் வரும்?

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தணிக்கை வாரியம் படத்தைப் பார்த்துவிட்டுத் திருத்தங்களைச் சொன்னார்கள். மேலும் யு/ஏ சான்றிதழ் தருவதாகவும் தெரிவித்தார்கள். பின்னர் திடீரென்று படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து புகார் வந்துள்ளதால், மறுஆய்வு குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று ஜனவரி 5 அன்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்கள். படம் வெளியாவதற்கு முன்பே எப்படி புகார் வரும் என்று தெரியவில்லை. மேலும், யு/ஏ சான்றிதழுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரே, மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பி வைக்க அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டனர்.

மத உணர்வைப் புண்படுத்தும் காட்சிகள்

தொடர்ந்து தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “மத உணர்வை புண்படுத்தும் விதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் வந்துள்ளதால், மறுஆய்வு குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சட்டப்படிதான் செயல்படுகிறது. இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” என்று வாதிட்டார்.இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட இலச்சினை

இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆஷா “படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பின் ஏன் மறுஆய்வுக்கு அனுப்ப வேண்டும்?” என்று தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த தணிக்கை வாரியத் தரப்பு வழக்கறிஞர், “படத்தில் பாதுகாப்புப் படையின் இலச்சினை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறோம். இது தொடர்பாக ஜனவரி 5 அன்றே தகவல் தெரிவித்துவிட்டோம். மறுதணிக்கைக்கு அமைக்கப்பட்ட குழுவின் புதிய உறுப்பினர்களும் படத்தைப் பார்க்க வேண்டும். அதற்கு 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இவ்வழக்கில் வரும் ஜனவரி 9 அன்று தீர்ப்பு வழங்கப்படும்’ என தெரிவித்தது வழக்கை ஒத்தி வைத்தார்.

Summary

The Madras High Court is expected to deliver its verdict on January 9 in the case related to the issuance of a censor certificate to Vijay's film Jananayagan.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in