

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த குட் பேட் அகில் படம், கடந்த ஏப்ரல் 10- ல் வெளியானது. இதில், திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில், குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது சர்ச்சை ஆனது. ’என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபா தாரேன்’ ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய அனுமதி இன்றி இந்த மூன்று பாடல்களைப் பயன்படுத்தியதைக் கண்டித்து இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் படத்தில் அவரது பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு நீதிபதி என். செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து பாடல் உரிமையை வாங்கியதாக கூறுகிறார்கள். பதிப்புரிமை சட்டப்படி, இசையமைப்பாளர்களிடம் தான் பாடல் உரிமை உள்ளது. ஒட்டுமொத்த படத்திற்கு தயாரிப்பாளருக்கு உரிமை இருந்தாலும், பாடல்களைத் தனியாக எடுத்து மூன்றாம் நபருக்கு விற்க தயாரிப்பாளருக்கு உரிமை இல்லை. மேலும், இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது என இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.
பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், தயாரிப்பாளர்களிடம் தான் முழு உரிமை உள்ளது. இளையராஜாவிடம் இசை உரிமை இருந்தால் அதை அவர் தான் நிரூபிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த மனு தொடர்பாக உத்தரவிட்ட நீதிபதி செந்தில்குமார், பாடல்களை உருமாற்றம் செய்வதை தடுக்கவும், அனுமதியின்றி பயன்படுத்துவதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது. அதனால் இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரை நீக்க முடியாது என்று கூறி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை 2026 ஜனவரி 6-க்கு ஒத்தி வைத்தார்.
The Madras High Court has said that the interim ban imposed on the use of Ilayaraaja songs in the film Good Bad Ugly cannot be lifted.