

இசையமைப்பாளர் இளையராஜாவின் படங்களை சமூக ஊடகங்களில் வணிக நோக்கில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜா சமீப காலமாக புது படங்களில் அவரது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்துவதாக தொடர்ந்து காப்புரிமை சார்ந்த வழக்குகளைத் தொடுத்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக ஊடகங்கள், யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது படம், பெயர், இசைஞானி என்ற பட்டம், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது, சமூக ஊடகங்களில் ஏற்கெனவே பதிவிடப்பட்ட படங்களை நீக்க உத்தரவிட வேண்டும், அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்குறைஞர்கள் பிரபாகரன், சரவணன் ஆகியோர் இசையமைப்பாளர் இளையராஜாவின் படத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் உருமாற்றி வருவாய் ஈட்டப்படுவதாகக் குற்றம்சாட்டினர். அப்போது குறிக்கிட்ட நீதிபதி, இளையராஜாவின் பெயரையும் படங்களையும் பயன்படுத்துவதில் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர், தனது படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகிறார்கள். இது தனது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதியின்றி இளையராஜாவின் படத்தைப் பயன்படுத்துவதாகவும், சில நேரங்களில் அவதூறான கருத்துகளும் பதிவிடப்படுவதாகவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து இளையராஜா தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சமூக ஊடகங்களில் இளையராஜாவின் படங்களை அனுமதி இன்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி யூடியூப் சேனல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
The Madras High Court has ordered an interim ban on the commercial use of music composer Ilayaraja's images on social media.