மனுசி படத்தைத் தணிக்கை செய்வது தொடர்பாக தயாரிப்பாளர் வெற்றி மாறன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
'அறம்' புகழ் கோபி நயினார் ஆண்ட்ரியாவை வைத்து மனுசி என்ற படத்தை இயக்கியுள்ளார். வெற்றி மாறன் தயாரித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியானது.
மனுசி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கடந்தாண்டு செப்டம்பரில் தணிக்கை வாரியம் மறுத்து தெரிவித்தது. மத்திய அரசை எதிர்மறை தோற்றத்தில் காண்பிப்பது, கம்யூனிச சித்தாந்தம் குறித்து குழப்பத்தை உண்டாக்குவது அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்படும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளது உள்ளிட்டவை காரணமாகச் சொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
தணிக்கை செய்யப்படாததற்கு எதிராக படத் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார். தணிக்கை தொடர்பான முடிவை எடுப்பதற்கு முன்பு தன் தரப்பு கருத்துகளை முன்வைக்க அனுமதிக்கப்படவில்லை என வெற்றி மாறன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை ஆர்வலர்களைக் கொண்டு புதிய குழுவினருடன் படத்தை மறுதணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று வெற்றி மாறன் தரப்பில் கடந்த மார்ச் 29-ல் முறையிடப்பட்டது. தேவைப்பட்டால், படத்திலிருந்து ஏதேனும் பகுதியை எடிட் செய்யத் தயார் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.
படம் பற்றி மறுமதிப்பீடு செய்ய படக் குழுவினருடன் சேர்ந்து படத்தைக் காணும் வகையில் படத்தைத் திரையிடுமாறு தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று படத்தை மீண்டும் திரையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தணிக்கை வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகள்/வசனங்கள்/காட்சிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மனுதாரரிடம் விளக்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்துள்ளதாகவும் தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எடிட் செய்து அதைச் சமர்ப்பித்தால், கருத்தில் கொள்ளப்படும் என்றும் தணிக்கை வாரியம் தெரிவித்தது.
வெற்றி மாறன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் என தணிக்கை வாரியம் சார்பில் குறிப்பிட்டுள்ளவற்றில் தங்களுக்கு ஆட்சேபனை இருப்பதாக வாதிடப்பட்டது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இந்த ஆட்சேபனைகளுக்கு இடமில்லை. முறைப்படி மனு மூலம் ஆட்பேசனைகளைக் குறிப்பிட்டு வழக்கு தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வெற்றி மாறன் தொடர்ந்த இந்த வழக்கு இதன்மூலம் முடித்துவைக்கப்பட்டது.