
வடிவேலு குறித்து அவதூறாக பேசக் கூடாது எனக் கூறி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வடிவேலும் சிங்கமுத்துவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிங்கமுத்து தன்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி ரூ. 5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சிங்கமுத்து பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கருத்து தெரிவிக்கவில்லை. தன்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்கை வடிவேலு தாக்கல் செய்துள்ளார். வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான் இருந்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் சிங்கமுத்து பதில் அளித்திருந்தாலும், தொடர்ந்து சிங்கமுத்து அவதூறாக பேசி வருவதாக வடிவேலு தரப்பில் இன்று முறையிடப்பட்டது.
இந்நிலையில், வடிவேலு குறித்து அவதூறாக பேசக் கூடாது எனக் கூறி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், வடிவேலு குறித்த அவதூறு காணொளிகளை நீக்கக் கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.