
மதராஸி படத்தின் உருவாக்கக் காட்சிகளை அனுமதி இன்றி பகிர வேண்டாம் எனப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மதராஸி படம், கடந்த செப்டம்பர் 5-ல் வெளியானது. அதில் ருக்மணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமால், ஷபீர் கல்லரக்கல், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ரசிகளிடம் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், படத்தின் உருவாக்கக் காட்சிகளை தங்கள் அனுமதி இல்லாமல் வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”மதராஸி படத்திற்கு ரசிகர்களான நீங்கள் அளித்து வரும் மகத்தான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் படம் பலரது கூட்டு முயற்சியால் உருவாகி, திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கொண்டாட்டம் மிகுந்த இந்தத் தருணத்தில், ஒரு சிறிய கவலையும் உள்ளது. மதராஸி படத்தில் பணியாற்றிய சிலர், படப்பிடிப்புத் தளப் புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதை நாங்கள் கவனித்துள்ளோம். இது தயாரிப்பாளர்களுக்கு நியாயமற்றது. அவ்வாறு செய்யும் சமூக வலைத்தள கணக்குகள் புகார் அளிக்கப்பட்டு நீக்கப்படும். ஊடகங்களில் வெளியிடும் அனைத்து படம், காணொளிகளும் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீலட்சுமி மூவீஸால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sivakarthikeyan | Madharaasi | Sri Lakshmi Movies | AR Murugadoss |