
சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் தற்போது நடுவராகப் பங்கேற்று வருகிறார்.
பிரபலங்களின் இல்லத் திருமண நிகழ்வுகள் மற்றும் முக்கிய விழாக்களில் இவரது மாதம்பட்டி கேட்டரிங் சர்வீஸின் சமையல் இடம்பெறுவது பெரிதாகப் பேசப்படும்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கும், வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளார்கள். ஆனால் இந்த தம்பதியருக்கு இடையே மனக்கசப்பு இருப்பதாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், தாம் ஆறு மாதங்கள் கருவுற்று இருப்பதாகவும், அவரது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டா கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். மேலும், ரங்கராஜுடனான திருமண புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள கணக்கில் அவர் பதிவிட்டிருந்தார்.
இது சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், எப்படி ஒருவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற விவாதம் சமூக ஊடகங்களில் கிளம்பியது.
இந்நிலையில், சென்னை கோயிலில் வைத்து திருமணம் செய்து, 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தன்னை மாதம்படி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையரகத்தில் ஜாய் கிறிசில்டா புகார் அளித்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.