இளையராஜா வரிசையில்...: முதல் சிம்பொனியை வெளியிடுகிறார் லிடியன்!

அடுத்தாண்டு ஜூன் 21 அன்று இதை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் லிடியன் நாதஸ்வரம்.
இளையராஜா வரிசையில்...: முதல் சிம்பொனியை வெளியிடுகிறார் லிடியன்!
1 min read

லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சிம்பொனியை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியை லண்டனில் நேற்று வெளியிட்டார். இந்த சிம்பொனி குறித்து அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம், சிம்பொனியை வெளியிடவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்புடைய காணொளியில் அவர் கூறியதாவது:

"இந்தியாவின் பெருமை, எக்காலத்துக்கும் தலைசிறந்த இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா, அவருடைய முதல் சிம்பொனி லண்டனில் நேற்று வெளியிடப்பட்டது. லண்டன் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவினருடன் அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஒட்டுமொத்த சிம்பொனியையும் கேட்க மிகுந்த மகிழ்ச்சியோடு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இசை குறித்து ஆலோசனைகளைப் பெறுவதற்காக நான் அவருடைய ஸ்டுடியோவுக்கு செல்லும்போதெல்லாம், இசையைப் பற்றி அவர் நிறைய விஷயங்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார். சிம்பொனி குறித்து நிறைய பேசுவார். நீயும் சிம்பொனி இசைப்பாய் என என்னையும் ஊக்கப்படுத்தியுள்ளார்.

அவர் கொடுத்த ஊக்கத்தினால், நான் என்னுடைய முதல் சிம்பொனியை வெளியிடவிருக்கிறேன். இளையராஜாவின் ஆசியால் மட்டுமே இதே நிகழ்கிறது. அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிறைய சிம்பொனிகளை வெளியிட்டு, அற்புதமான இசையைக் கொடுப்பார்" என்றார் லிடியன் நாதஸ்வரம்.

அடுத்தாண்டு ஜூன் 21 அன்று இதை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் லிடியன் நாதஸ்வரம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in