லப்பர் பந்து படத்தின் வெளியீட்டுத் தேதியை ஹாட்ஸ்டார் நிறுவனம் முடிவு செய்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட் உள்பட பலர் நடிப்பில் கடந்த செப். 20 அன்று வெளியான படம் ‘லப்பர் பந்து’. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஹாட்ஸ்டார் நிறுவனம் முடிவு செய்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தெரிவித்துள்ளார்.
கலாட்டா பிளஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லக்ஷ்மண் குமார் பேசியதாவது:
“இப்படத்தை பார்த்தவுடன் வாங்கிக் கொள்வதாக ஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அக்டோபர் மாதம்தான் வெளியிட முடியும் என்றார்கள். மேலும், அக்டோபரில் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றால், செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
எனவே, படத்தின் சென்சார் வேலைகள் உள்பட அனைத்து வேலைகளையும் கடந்த மார்ச் மாதத்தில் நிறைவு செய்திருந்தாலும், திரையரங்குகளில் வெளியிட அடுத்த 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி செய்தால் தான் படம் வெளியான அடுத்த 28 நாட்களில், ஹாட்ஸ்டார் நிறுவனம் படத்தை வெளியிடும். பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் சில சமரசங்கள் இருக்கும். ஆனால், மற்ற படங்களைப் பொறுத்தவரை, ஓடிடி நிறுவனம் தரப்பில் இருந்து வெளியீட்டு தேதியை கூறுவார்கள்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.