லப்பர் பந்து பட வாய்ப்பைத் தவறவிட்ட நடிகர்கள் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட் உள்பட பலர் நடிப்பில் கடந்த செப். 20 அன்று வெளியான படம் ‘லப்பர் பந்து’. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்துக்கு முதலில் ஜப்பான் என்ற தலைப்பை வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தெரிவித்துள்ளார்.
கலாட்டா பிளஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லக்ஷ்மண் குமார் பேசியதாவது: “ஆரம்பத்தில் இப்படத்துக்கு ஜப்பான் என்று பெயரிட யோசித்தோம். ஆனால், ஏற்கெனவே அந்த தலைப்பை மற்றொருவர் பதிவு செய்து வைத்ததாகவும், அதன் பிறகு அந்த தலைப்பு கார்த்தியின் படத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து படத்தின் தலைப்பை இறுதியில் மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து படப்பிடிப்பை தொடங்கினோம்.
முதலில் இப்படத்தில் தினேஷ் கதாபாத்திரத்தில் நடிகர் நட்டி நடிப்பதாக இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்கு எஸ்.ஜே. சூர்யாவையும் அணுகினோம். ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்துக்கு நடிகர் ஹிப் ஹாப் ஆதியை அணுகினோம். இக்கதைக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்தோம்.
ஸ்வாசிகாவை தேர்வு செய்தது மிகவும் முக்கியமான ஒரு முடிவு. அந்த கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். யசோதா கதாபாத்திரத்தை எழுதும் போதே பிரியாமணியை நினைவில் வைத்து எழுதியதாகவும் கூறினார். ஆனால், அம்மா கதாபாத்திரத்தில் அவர் நடிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.
அதன் பிறகு வரலட்சுமி சரத்குமாரை அணுகினோம். அதற்கு, “என்னை அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க கேட்ட அந்த இயக்குநர் யார்” என்று கேட்டு வரலட்சுமி சரத்குமார் விளையாட்டாக சண்டைப் போட்டார். அதன் பிறகு ஸ்வாசிகாவை இயக்குநர் தான் தேர்வு செய்தார்”
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.