இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தியது குறித்து லப்பர் பந்து இயக்குநர் விளக்கம்!

நமது படத்துடன் ஒப்பந்தத்தில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பாடல்களை பெறுவது சுலபம்.
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தியது குறித்து லப்பர் பந்து இயக்குநர் விளக்கம்!
1 min read

இளையராஜாவின் பாடல்களைத் தனது படத்தில் பயன்படுத்தியது குறித்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட் உள்பட பலர் நடிப்பில் கடந்த செப். 20 அன்று வெளியான படம் ‘லப்பர் பந்து’. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் இயக்குநர் விஜயகாந்தின் தீவிர ரசிகர் என்பதால், லப்பர் பந்து படத்தில் நிறைய இடங்களில் விஜயகாந்த் தொடர்பான குறியீடுகள் இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக ‘நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்’ பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல் ஹரிஷ் கல்யாண் வரக்கூடிய காட்சிகளுக்கு ‘போக்கிரி’ படத்தில் இடம்பெற்ற பாடல் வருவதும், ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் இடம்பெற்ற காட்சியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இளையராஜா இசையமைத்த பொட்டு வைச்ச தங்கக் குடம் பாடலைப் பயன்படுத்துவதில் காப்புரிமை பிரச்னை ஏற்படவில்லையா என்கிற கேள்விக்கு இயக்குநர் தமிழரசன் பதிலளித்துள்ளார்.

நீலம் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

“நாங்கள் பயன்படுத்திய பெரும்பாலான பாடல்களின் காப்புரிமை சோனியிடம் இருந்தது. நமது படத்துடன் ஒப்பந்தத்தில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பாடல்களை பெறுவது சுலபம். ‘நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ’,‘ஆட்டமா தேரோட்டமா’ மற்றும் இன்னும் சில பாடல்கள் சோனியிலேயே இருந்தன.

ஆடுங்கடா என்ன சுத்தி பாடலின் காப்புரிமை மட்டும் ஃபைவ் ஸ்டார் நிறுவனத்திடம் இருந்தது. அதுவும் ஹரிஷ் கல்யாணின் தந்தையின் நிறுவனம் என்பதால் சுலபமாக கிடைத்தது. எருக்கஞ்செடி ஓரம் என்கிற பாடலின் காப்புரிமை மட்டும் யாரிடம் இருக்கிறது என்றே தெரியவில்லை, எனவே அப்பாடலை பயன்படுத்தவில்லை”.

இவ்வாறு தமிழரசன் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in