ரஜினி குறித்து யூடியூப் உள்பட சமூகவலைத்தளங்களில் சிலர் பேசியதையும், எழுதியதையும் பார்த்து பயந்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், செப் 30 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், அது அறுவைச் சிகிச்சை முறையில் அல்லாமல் சரிசெய்யப்பட்டதாகவும், வீக்கத்தை முற்றிலும் குறைக்கும் விதமாக இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், ரஜினி இரு நாள்களில் வீடு திரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த், அக். 3 அன்று வீடு திரும்பினார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ், ரஜினியின் உடல்நலம் குறித்து பேசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் பேசியதாவது
ரஜினி நலமாக இருக்கிறார். நேற்றிரவு கூட அவரிடம் பேசினேன். இது குறித்து நானே விளக்கம் அளிக்க விரும்புகிறேன். 30-40 நாட்களுக்கு முன்பே ஒரு சிறிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று ரஜினி தெரிவித்தார். அதை வைத்துதான் நாங்கள் படப்பிடிப்பை திட்டமிட்டிருந்தோம். கடந்த செப். 30 அன்று சிகிச்சை இருந்ததால், 28 அன்றே அவருடைய படப்பிடிப்பை முடித்து அனுப்பி விட்டோம்.
எங்களுக்கு இது குறித்து முன்பே தெரியும் என்பதால், யூடியூப் உள்பட சமூகவலைத்தளங்களில் சிலர் பேசியதையும், எழுதியதையும் பார்த்து பயந்துவிட்டோம். ஒருவேளை படப்பிடிப்பில் ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் நாங்கள் அனைவரும் மருத்துவமனை வாசலில்தான் இருந்திருப்போம்.
இன்று பெரும்பாலானோர் யூடியூபை மட்டும்தான் பார்க்கிறார்கள். எனவே, அதில் ஒரு சிலர் ரஜினியை அருகில் இருந்து பார்த்ததுபோல் பேசியது எங்களுக்கு பயத்தைக் கொடுத்தது. ரஜினி எப்போதும் நலமாக இருப்பார். ஆண்டவன் அருளால் அவருக்கு எதுவும் ஆகாது. எனவே, தயவுசெய்து யாரையும் பயமுறுத்தாதீர்கள்.
எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது தொடர்பான அதிகாரபூர்வ தகவலை மட்டும் தெரிவிக்க வேண்டும். நான் இதை வேண்டுகோளாகவே வைக்கிறேன். தற்போது, படப்பிடிப்புக்கு 10 நாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 முதல் படப்பிடிப்பு மீண்டும் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.