
கமலுக்கும் ரஜினிக்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கியுள்ளார்.
ரஜினியின் கூலி படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா யூடியூப் சேனலில் கமல் மற்றும் ரஜினியுடன் பணியாற்றியது குறித்து பேட்டியளித்துள்ளார்.
கமல் நடிப்பில் கடந்த 2022-ல் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கமலுடனான வெற்றியைத் தொடர்ந்து லியோ படத்தை இயக்கிய லோகேஷ், தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கிவருகிறார்.
இந்நிலையில் கமலுக்கும் ரஜினிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
“ரஜினி, இயக்குநர்களின் நடிகர். அவர் திரையில் ஒரு மாயாஜாலத்தை உருவாக்குவார். திரையில் தோன்றுவதற்கும், மற்ற நேரங்களில் அவரை பார்ப்பதற்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. சக நடிகர் எப்படி நடிக்கிறார், பதிலுக்கு நாம் எப்படி நடிக்க வேண்டும் என எப்போதும் குறிப்பிட்ட காட்சி குறித்து யோசித்து கொண்டே இருப்பார். அவ்வளவு சீக்கிரத்தில் ஓய்வும் எடுக்க மாட்டார்.
கமலை பொறுத்தவரை அவர் முற்றிலும் மாறுபட்ட ஒருவர். தான் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்று கமலே கூறுவார். எனவே ஒரு காட்சி குறித்து ஒரு நடிகரிடமும், தொழில்நுட்ப கலைஞரிடமும் பேசுவதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். இருவரது நடிப்பு குறித்து எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. இரு ஜாம்பாவான்களின் நடிப்பையும் அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்”.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.