

ஏவிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டூடியோஸ். கடந்த 1945-ல் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தமிழ்த் திரை வரலாற்றில் பல முக்கியமான படங்களைத் தயாரித்துள்ளது. சிவாஜி கணேசன். எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. சென்னை வடபழனியில் பிரமாண்டமான ஸ்டூடியோவை ஏவிஎம் நிறுவியது. இன்றளவும் அது அப்பகுதியின் பெரும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
ஏவிஎம் ஸ்டூடியோஸின் நிறுவனர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரின் மறைவுக்குப் பின் அவரது மகனான ஏவிஎம் சரவணன் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.
தந்தையைப் போலவே ஏவிஎம் சரவணனும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அப்போதைய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த்தில் தொடங்கி, விஜய், அஜித், சூர்யா எனப் பல கதாநாயகர்களின் படங்களைத் தயாரித்துள்ளார் ஏவிஎம் சரவணன். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தனது பணிவான உடல்மொழி மூலம் திரையுலகில் தனித்துவமாக அறியப்பட்டார். எஜமான், மின்சாரக் கனவு, பிரியமானவளே, சிவாஜி, அயன் என்று மாறுபட்ட வெற்றிப் படங்களை இவர் தயாரித்துள்ளார்.
சமீப காலமாக படத் தயாரிப்பில் இந்த நிறுவனம் பெரிதளவில் ஈடுபடாமல் இருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஏவிஎம் சரவணன் ஓய்வில் இருந்தார். அவருக்கு அவ்வப்போது உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 86. நேற்று தனது பிறந்தநாளைக் கண்ட ஏவிஎம் சரவணன் இன்று காலமானார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி தெரிவித்து வருகிறார்கள்.