
விஜய் இல்லாமல் எல்சியூ முழுமை பெறாது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாநகரம் மூலம் திரைத் துறையில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என தமிழ்த் திரைத் துறையின் முன்னணி இயக்குநராக உள்ளார். இவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ படங்கள் எல்சியூ எனப்படும் சமகாலத்தில் நிகழக்கூடிய படங்கள். கைதி படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் விக்ரம் மற்றும் லியோ படங்களிலும் இடம்பெற்றன.
இக்கதைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைய வேண்டும் என்றால் கார்த்தி, கமல் ஹாசன், விஜய் ஆகியோர் ஒரே படத்தில் நடித்தாக வேண்டும். இதற்கான கதை இருப்பதாகவும் நடிகர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்பட்சத்தில் இது சாத்தியம் என்றும் லோகேஷ் கனகராஜ் நேர்காணல்களில் முன்பு தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாகவே பெரும்பாலும் ஊடகங்களைச் சந்திக்கும்போதெல்லாம் எல்சியூ குறித்த கேள்விகள் இடம்பெறுவது வழக்கமாகவே இருந்து வந்துள்ளன. ரஜினி காந்த் நடித்து வரும் கூலி படம் எல்சியூ-வில் இடம்பெறும் கதையா என்பதும் தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டு வந்துள்ளன. கூலி தனித்த படம் என்றே லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு முறையும் தெளிவுபடுத்தி வருகிறார். கூலி படத்தின் விளம்பரப் பணிகள் தொடங்கியுள்ளன. இவரும் நேர்காணல்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளார், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், எல்சியூ குறித்து அவர் மீண்டும் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
கோவையில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் கூறியதாவது:
"விஜய் இல்லாமல் எல்சியூ இருக்காது. ஆனால், அவர் உள்ளே வருகிறாரா இல்லையா என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அவருடைய எண்ணம் இன்று என்னவாக உள்ளது, அவருடைய முயற்சி எங்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, என் சினிமாவுக்காக நான் அதில் கருத்து கூறுவது சரியான தருணமாக இருக்காது என நினைக்கிறேன். ஆனால், ஒருபோதும் விஜய் இல்லாமல் எல்சியூ முழுமை பெறாது" என்றார்.
Lokesh Kanagaraj | LCU | Vijay | Leo | Vikram | Kaithi | Karthi | Kamal Haasan | Coolie | Rajini Kanth