லால் சலாம் ஓடிடியில் வெளியாகிறதா?: வேகமாக பரவும் போஸ்டர்!
ரஜினி நடித்த லால் சலாம் படம் ஓடிடியில் வெளியாவதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில் தேவ் போன்ற பலர் நடித்த படம் ‘லால் சலாம்’.
இப்படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இப்படம் பிப். 9 அன்று வெளியானது.
ரசிகர்களிடையே பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அடையவில்லை.
இப்படம் வெளியான பின்பு பேட்டியளித்த ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் (Hard Disk) காணாமல் போனதாகவும், அதனால் தான் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என்றும் கூறினார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
படம் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் ஓடிடியில் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பு இதுபோல லெஜண்ட் சரவணன் நடித்த லெஜண்ட் படமும் நீண்டநாளாக ஓடிடியில் வெளியாகாமல் ஒருவழியாகப் படம் வெளிவந்து 7 மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் லால் சலாம் படம் வருகிற செப்டம்பர் 20 அன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகச் செய்தி ஒன்று வெளியானது. கூடவே ஓடிடி வெளியீட்டுத் தேதி கொண்ட போஸ்டரும் ஒன்றும் வெளியானது.
ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரபூர்வத் தகவலும் வரவில்லை என்பதால் அந்த போஸ்டர் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டர் என்பது தெளிவானது.
எனினும் இந்தச் செய்தியால் விரைவில் லால் சலாம் படம் ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.