ஆணாதிக்கம், சாதிய மூர்க்கத்தனம், கல்வி அளிக்கும் விடுதலை என அனைத்தையும் 1 மணி நேர 30 நிமிடப் பயணத்தில் நேர்த்தியாகப் பேசியிருக்கிறார் வினோத் ராஜ்.
மதுரை பக்கம் கிராமத்தில் வசிக்கக் கூடிய இளம் பெண்ணான அனா பென் கல்லூரிக்குச் செல்கிறார். சென்ற இடத்தில் ஒருவர் மீது காதல் ஏற்படுகிறது. இது மீனாவின் குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. மீனாவை முறைமாமனான சூரிக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது குடும்பத்தினரின் விருப்பம். சூரிக்கும் மீனாவைத் திருமணம் செய்வதில்தான் ஆர்வம்.
அனா பென் காதலில் மிகுந்த உறுதியுடன் இருப்பதால், இவருக்குப் பேய் பிடித்துவிட்டதாகக் கூறி சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். இதுதான் படத்தின் மூலக் கதை. ஆனால், இது படத்தில் எங்கும் காட்சியாக இருக்காது.
ஓர் அதிகாலையில் தொடங்கி, அன்றைய நாளில் அனா பென்னை சாமியாரிடம் அழைத்துச் செல்லும் ஒரு பயணம் தான் கொட்டுக்காளி. இந்தப் பயணத்திலேயே கதையை ஆங்காங்கே அழகாக விவரித்திருக்கிறார் வினோத் ராஜ். படம் பேசுவது ஆணாதிக்கம் மற்றும் சாதியின் மூர்க்கத்தனம். பிரசாரப் படமாக அல்லாமல் அடுக்கடுக்கு வசனங்களாக அல்லாமல் காட்சிகளின் ஊடாகவே இரண்டையும் கண்முன் கொண்டு வந்ததுதான் படத்தின் பலம்.
சாதியையும் ஆணாதிக்கத்தையும் பேசுவதாக மட்டுமில்லாமல் ஆணின் மனதில் இந்த எண்ணம் எப்படி விதைக்கப்படுகிறது என்பதையும் தொட்டிருப்பது கொட்டுக்காளியின் மற்றொரு சிறப்பம்சம். தாய் மாமன் சீர் எனும் மரபு நம் ஊர் வழக்கமாக இன்றும் கொண்டாடப்படுகிறது. தாய் மாமன் சீர் நிகழ்வைக் கொண்டாடிப் படங்களும், பாடல்களும் வந்துள்ளன. ஆணாதிக்கத்தனம் வளர்வதற்கு இந்தச் சடங்குகளும், இதைக் கொண்டாடும் திரைப்படப் பாடல்களின் உளவியலும் ஒரு காரணம் என்பதை கதைக்குத் தொடர்பற்ற கதாபாத்திரங்கள் மூலம் சொல்லியிருக்கிறார். காட்சியோடு நிறுத்திக்கொள்ளாமல் ரசிகர்களுக்காக சிறிய வசனத்தை வைத்திருந்தாலும்கூட, வெறும் காட்சியே இதன் வீரியத்தை நமக்கு உணர்த்துகிறது.
இப்படியாக படம் முழுக்க பயணத்தின் ஊடாக பல செய்திகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
இதற்குப் பெரிய உதவியாக இருந்தது நடிகர்கள் தேர்வும், பின்னணி இசை இல்லாததும். அனா பென் படம் முழுக்க மிகவும் இறுக்கமான ஒரு பெண்ணாக இருக்கிறார். தமிழ் வாசம் இல்லாத ஒருவர் என்பது எந்தவொரு இடத்திலும் தென்படாத வகையில் மண்ணின் மகளாக ஒன்றியிருக்கிறார். வசனங்கள் இல்லாதபோதிலும், முகப் பாவனைகளில் திக்குமுக்காடச் செய்கிறார். பார்வைகள் மூலமாகவே நம்முடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிறார்.
இவருக்குக் கடும் போட்டியாக இருக்கிறார் சூரி. கிராமத்தில் இருக்கக்கூடிய ஆணாதிக்க, சாதிய மூர்க்கத்தனங்கள் கொண்ட ஒருவரை அப்படியே கண்முன் கொண்டுவந்திருக்கிறார். அனா பென்னைக் காட்டிலும் சூரிக்குக் கூடுதல் வசனங்கள் இருந்தாலும், இவரும் பார்வை மூலமாகவே நம்மிடம் பேசுகிறார்.
வாயைத் திறக்காது முடிந்ததைப் பாருங்கள் என்பதை மிகவும் ஆழமாக அனா பென் கடத்துகிறார். இவருடைய அமைதியும் பிடிவாத குணமும் ஏற்படுத்தும் கோபத்தை அற்புதமாக வெளிப்படுகிறார் சூரி. இவர்களுடைய நடிப்புதான் கதையை நகர்த்துகிறது. துணைக் கதாபாத்திரங்களாக நடித்துள்ளவர்கள் இயக்குநர் வினோத் ராஜின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். இவர்களுடைய உடல்மொழியும் வசனங்களில் உள்ள வட்டார மொழியும் அந்நிய உணர்வைத் தராமல் படத்தைப் பாதுகாக்கிறது.
படத்தில் பின்னணி இசை கிடையாது. இருந்தபோதிலும், பின்னணி இசை குறித்த சிந்தனை வராதவாறு ஒளிப்பதிவாளரும், ஒலி வடிவமைப்பாளர்களும் பார்த்துக்கொண்டார்கள். விருதுகள் பெறும் படம் என்பதற்காகவே கேமிராவை ஒரே இடத்தில் நீண்ட நேரத்தில் வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏற்படாது. ஒரு ஷாட் நீளமாக உள்ளது என்றால் அதை நியாயப்படுத்தும் விதமாக காட்சி விவரிப்பு அமைந்துவிடுகிறது. ஓரிரு இடங்களில் மட்டும் ஸ்டெடி இல்லாமல் குண்டும் குழியுமான சாலைகளுக்கு ஏற்ப கேமிரா அசைவுகள் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வரும். மற்றபடி ஒளிப்பதிவு அட்டகாசமாக இருந்தது.
ஒலி வடிவமைப்புதான் படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்க அம்சம். அதிகாலையில் வரும் பறவைகள் சப்தம், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சப்தம், சேவல் சப்தம், காற்றின் சப்தம், நீரோட்டத்தின் சப்தம் என படம் நடைபெறும் இடத்தை நேரடியாக உணர வைத்திருக்கிறார்கள்.
சாதி மற்றும் ஆணாதிக்கத்தைப் பேசியது, இதற்கான காரணங்களாக சடங்குகளைக் கேள்விக்குள்ளாக்குவது என்று மட்டுமில்லாமல், இந்தப் பயணத்தின் வழியாக பெண்களின் பிரச்னைகள், பெண்களின் வாழ்க்கையில் கல்வி ஏற்படுத்தும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் ஆரவாரமின்றி பேசுகிறது கொட்டுக்காளி. ஒருபுறம் பெரிதளவில் கல்வியறிவு பெறாத சூரியின் தங்கைகள், மறுபுறம் கல்வி பெற்ற அனா பென் என இருதரப்பு பெண்களின் உலகம் என்னவாக இருக்கிறது என்பதை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியிருப்பது இதற்கு உதாரணம்.
இவை அனைத்தையும் பயணத்தின் வழியாகப் பேசிச் செல்வதால் பயணத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதுதான் கிளைமாக்ஸ். ஆனால், இதை சமூகத்தின் கையில் ஒப்படைத்திருக்கிறார் இயக்குநர்.
டிரைலரில் பார்த்ததைப்போல படம் முழுவதும் அனா பென் வாழ்க்கையும், சேவல் வாழ்க்கையும் ஒன்றாக இருக்கிறது. இறுதியில் சேவலுக்கு ஒரு முடிவு காத்திருக்கிறது. அனா பென்னுக்கும் இதே முடிவுதானா என்ற கேள்வியுடன் படத்தை முடித்திருக்கிறார்கள். இறுதியில் சூரியைச் சுற்றி காட்சிகள் இருக்கும். இவருடைய சிந்தனை என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் நம்முள் எழலாம். சூரி தான் சமூகம், சமூகம் தான் சூரி. சமூகமாக இந்த இடத்தில் நாம் என்ன முடிவை எடுக்கவிருக்கிறோமோ, அதை தான் சூரியும் எடுப்பார் என்கிற வகையில் கதை முடிந்ததாகவே நான் உணர்கிறேன்.
சமூக அக்கறையைப் பேசுகிறது, ஒரு நாளில் நடக்கும் பயணம், திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றிருக்கிறது, பின்னணி இசை இல்லை என்பதற்காக 'அவார்ட் படம்' என்ற எண்ணம் தோன்றினால், அதைத் தவிர்த்துவிடலாம். அற்புதமான திரை அனுபவம் காத்திருக்கிறது. இந்தப் பயணத்தில் சிரிக்கவும் வைக்கிறார்கள், சிந்திக்கவும் வைக்கிறார்கள்.
மொத்தத்தில், சாதிய மூர்க்கனத்தனத்தின் ஓர் உச்சநிலை ஆணவக் கொலை என்றால், இதன் முந்தைய நிலை என்ன, இதில் என்னவெல்லாம் நடக்கும், இதில் பெண் என்னென்ன இன்னல்களையெல்லாம் எதிர்கொள்கிறாள் என்பதுதான் வினோத் ராஜின் கொட்டுக்காளி.