புகழ்பெற்ற நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) வயதுமூப்பு காரணமாக ஹைதராபாதில் இன்று காலமானார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நகரில் ஜூலை 10, 1942-ல் பிறந்தவர் கோட்டா சீனிவாச ராவ். 1978-ல் நடிக்கத் தொடங்கினார். 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சாமி, திருப்பாச்சி மூலம் பிரபலமடைந்தார் கோட்டா சீனிவாச ராவ் (Kota Srinivasa Rao).
தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அரசியலிலும் கால் பதித்துள்ள கோட்டா சீனிவாச ராவ், 1999 முதல் 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதியிலிருந்து பாஜக சார்பில் சட்டப்பேரவைக்குத் தேர்வானார்.
சீனிவாச ராவ் பத்மஸ்ரீ விருதை வென்றுள்ளார். இவருடைய மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.