தெலுங்கு நடிகர்களின் படங்களுக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு கிடைப்பதில்லை: நடிகர் கிரண் அப்பாவரம் வேதனை | Kiran Abbavaram |

நாங்கள் எல்லா தமிழ்ப் படங்களையும் பார்க்கிறோம், கொண்டாடுகிறோம்...
தெலுங்கு நடிகர்களின் படங்களுக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு கிடைப்பதில்லை: நடிகர் கிரண் அப்பாவரம் வேதனை | Kiran Abbavaram |
1 min read

தெலுங்கில் தமிழ்ப் படங்களைக் கொண்டாடுவது போல் தமிழிலும் தெலுங்குப் படங்களைக் கொண்டாடி இடமளிக்க வேண்டும் என்று தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் ராஜா வாரு ராணி வாரு படத்தின் மூலம் அறிமுகமான கிரண் அப்பாவரம், மீட்டர், ரூல்ஸ் ரஞ்சன், கா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். கடந்த மார்ச் மாதம் அவர் நடித்த தில்ருபா படம் வெளியானது. அடுத்ததாக இவர் நடித்துள்ள கே ராம்ப் படம் வரும் அக்டோபர் 18 அன்று வெளியாகவுள்ளது.

இதையொட்டி, கலாட்டா பிளஸ் யூடியூப் சேனலில் பரத்வாஜ் ரங்கனுடனான நேர்காணலில் பங்கேற்றார். அந்தக் காணொளி வெளியாகியுள்ளது. அதில் தனது திரைத்துறை பயணம் உள்பட பல்வேறு சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் குறிப்பாக அவரது முந்தைய படமான கா-வை தமிழில் வெளியிட நினைத்தபோது தனக்கு திரையரங்குகளில் இடம் மறுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

”நான் நடித்த கா படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட வேண்டும் என்று என்னென்னவோ செய்தேன். ஆனால் எனக்கு எந்தத் திரையரங்கிலும் இடம் கொடுக்கவில்லை. நான் கா படத்தைத் தமிழில் வெளியிடக் கேட்டபோது தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் வேறு எந்த மொழிப் படத்திற்கும் இடம் கிடைக்காது என்று கூறிவிட்டார்கள். என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. தெலுங்கிலும் எனக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஒரு வாரம் ஆன பிறகே எனக்கு 10 திரையரங்குகள் கிடைத்தன.

நல்ல படம் செய்திருக்கிறீர்கள். ஆனால் சென்னையில் எங்களால் தெலுங்கில் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கேட்டார்கள். இளம் கதாநாயகனாக நானும் என் படங்களைத் தமிழ் மக்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் நாங்கள் எல்லா தமிழ்ப் படங்களையும் பார்க்கிறோம். கொண்டாடுகிறோம். தெலுங்கில் 10 தமிழ் கதாநாயகர்களுக்காவது நல்ல வணிக வரவேற்பு உள்ளது. எப்படி பிரதீப் ரங்கநாதனின் படம் தெலுங்கில் வரவேற்புடன் வெளியாகிறதோ, அதே போல் என்னுடைய படத்தை தமிழில் வெளியிட விரும்பினேன். எங்கள் ஊரில் தமிழ் நடிகர்கள் விரும்பப்படுவது போல, தமிழ்நாட்டில் நாங்களும் விரும்பப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை” இவ்வாறு தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in