
விஜய் தேவெரகொண்டாவின் கிங்டம் பட சர்ச்சை தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழக மக்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளது.
விஜய் தேவெரகொண்டா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் கிங்டம். இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
ஆனால், ஈழத் தமிழர்கள் குறித்து தவறாகச் சித்தரிக்கப்படும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தமிழ்நாட்டில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. படத்தைத் திரையிடுவதற்கு எதிராக ஆங்காங்கே நாம் தமிழர் சார்பில் போராட்டம் வெடித்தது. இப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டித்தார்.
இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் படக் குழு சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் 'கிங்டம்'. இப்படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாகக் கேள்விப்பட்டோம்.
தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.
இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என படத்தின் மறுப்புப் பகுதியில் குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். இதையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
'கிங்டம்' திரைப்படத்துக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!" என்று படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kingdom | Vijay Deverakonda | Naam Tamilar Katchi | NTK | Seeman | Vaiko | MDMK | Srilankan Tamils | Sithara Entertainments