போதைப்பொருள் பறிமுதல்: ஆலப்புழா ஜிம்கானா இயக்குநர் கைது

போதைப்பொருள் பறிமுதல்: ஆலப்புழா ஜிம்கானா இயக்குநர் கைது

கடந்த வாரம் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
Published on

கேரளத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரபல மலையாள இயக்குநர் காலித் ரஹ்மான் உள்பட மூவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.

கேரள மாநிலம் கொச்சியில் போதைப்பொருள் பயன்படுத்துவது தொடர்பாக கலால் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பின்னிரவில் சோதனை நடத்தியுள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சோதனை நடத்தியபோது, இயக்குநர் காலித் ரஹ்மான் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆலப்புழா ஜிம்கானா, தள்ளுமாலா, உண்ட, அனுராக கரிக்கின்வெள்ளம் படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். ஆலப்புழா ஜிம்கானா திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அஷ்ரஃப் ஹம்சா. இவரும் தமாஷா மற்றும் பீமண்டே வழி படங்களை இயக்கிய பிரபல இயக்குநர். மற்றொருவர் இவர்களுடைய நண்பர்.

மனோரமா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்த மூவரை அழைத்துச் சென்றோம். அவர்களிடத்திலிருந்து ஹைபிரிட் கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளோம். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருந்த குடியிருப்பு ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிருக்குச் சொந்தமானது" என்றார்.

கைது செய்யப்படும்போது போதைப்பொருளை உட்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் அதிகாலை 5.30 மணியளவில் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.

கடந்த வாரம் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து திரை நட்சத்திரங்கள் போதைப்பொருள் வழக்குகளில் கைதாவது மலையாளத் திரைத் துறை மீது எதிர்மறையான வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in