‘தி கேரளா ஸ்டோரி 2’ வழக்கு: நீதிபதிகளுக்குத் திரையிட படக்குழு மறுப்பு | Kerala Story 2 |

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் படம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்....
‘தி கேரளா ஸ்டோரி 2’ வழக்கு: நீதிபதிகளுக்குத் திரையிட படக்குழு மறுப்பு
‘தி கேரளா ஸ்டோரி 2’ வழக்கு: நீதிபதிகளுக்குத் திரையிட படக்குழு மறுப்பு
2 min read

கேரளா ஸ்டோரி 2 படத்தை நீதிபதிகள் பார்க்கச் சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்ய நீதிபதி உத்தரவிட்ட நிலையில், படத்தை நீதிபதிகளுக்குக் காட்ட முடியாது என்று படக்குழு மறுத்துள்ளது.

2023-ல் சுதிப்டோ சென் இயக்​கத்​தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம், கேரளாவில் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்படம் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது.

சர்ச்சையைக் கிளப்பிய டிரெய்லர்

இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம், ‘தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்” என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படம் பிப்ரவரி 27 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் கடந்த பிப்ரவரி 14 அன்று வெளியானது. இதிலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும், இப்படத்தைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

கேரள முதலமைச்சர் கண்டனம்

“தி கேரளா ஸ்டோரி' என்ற வெறுப்பைத் தூண்டும் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதாக வரும் செய்திகள் மிகுந்த கவலைக்குரியவை. முதல் பாகத்தின் வகுப்புவாத நோக்கத்தையும் அப்பட்டமான பொய்களையும் ஏற்கனவே கண்டுகொண்ட கேரளா, நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை இழிவுபடுத்தும் இந்த முயற்சியை மீண்டும் அருவருப்புடன் நிராகரிக்கும். வகுப்புவாத மோதல்களைத் தூண்டும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகளுக்குத் தங்கு தடையின்றி அனுமதி அளிக்கப்படுவதும், அதே வேளையில் கலையின் ஆக்கபூர்வமான வெளிப்பாடுகள் முடக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கிறது. ஒற்றுமையின் நிலமான நமது மண்ணை பயங்கரவாதத்தின் மையமாகச் சித்தரிக்க முயலும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். உண்மை எப்போதும் வெல்லும்” என்று பதிவிட்டிருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இதையடுத்து படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு எதிராக கேரள மாநிலம் கண்​ணூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த தேவ் நம்​பூ​திரி என்​பவர் கேரள உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் காட்டப்படும் சம்பவங்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சார்ந்தவையாக இருந்தாலும், 'கேரளா' என்ற பெயரில் சித்தரிப்பது தவறானது என்று வாதாடினார். இதற்குப் பதிலளித்த படக்குழுவினர், டீசரில் உள்ள சில காட்சிகள் திரைப்படத்தில் இடம் பெறவில்லை என்று விளக்கம் அளித்தனர்.

நீதிபதிகளுக்குத் திரையிட வேண்டும்

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் கூறியதாவது:-

“கேரளா ஒரு மதச்சார்பற்ற மாநிலம்; இங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த மாநிலத்திலும் ஏதோ அசம்பாவிதம் நடப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவது தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும். இதை தணிக்கை வாரியம் கவனிக்கவில்லையா? படத்தின் தலைப்பிலேயே மாநிலத்தின் பெயர் இடம் பெற்றிருப்பதால், மக்களின் அச்சத்தைப் புறக்கணிக்க முடியாது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் படம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். அதனடிப்படையில், நாளை (பிப். 25) நீதிபதிகள் முன்னிலையில் இப்படத்தைத் திரையிட வேண்டும். நீதிபதிகள் படத்தைப் பார்த்த பின்னரே படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறித்த இறுதி முடிவை எடுக்க முடியும்” என்று உத்தரவிட்டார்.

படக்குழு மறுப்பு

ஆனால், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவின் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், படத்தை நீதிபதிகளுக்குத் திரையிட படக்குழு மறுத்தது. ஆனால், நீதிபதிகளின் உத்தரவுப்படி சமூக ஊடகங்களில் இருந்து படத்தின் டிரெய்லரைத் தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Summary

The Kerala High Court on Tuesday ordered the makers of The Kerala Story 2 to arrange a screening of the Hindi film for the court in Kochi before its release on Friday.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in