கேரள மாநிலத் திரைப்பட விருதுகளில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது கிடைக்காதது வருத்தமாக உள்ளதாக இயக்குநர் பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
54-வது கேரள மாநிலத் திரைப்பட விருதுகள் நேற்று (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டது.
இதில், பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் படத்துக்கு 9 விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சவுண்ட் மிக்ஸிங் உட்பட 9 விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டிருந்தாலும், சிறந்த இசைக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது வழங்காததை அவமானமாக கருதுகிறேன் என்று இயக்குநர் பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மனோரமா நியூஸுக்கு அளித்த பேட்டியில், “இப்படத்துக்கு ஆன்மாவாக இருந்தது இசைதான். படத்தின் முழு கதையை உருவாக்குவதில் இசை முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இப்படத்துக்கு இசை முக்கியம் என்பதால் தான் ஏ.ஆர். ரஹ்மானை அழைத்தோம். படத்தின் பின்னணி இசையை அமைப்பதற்காக அவர் கடினமாக உழைத்தார். ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது வழங்காததை அவமானமாக கருதுகிறேன். ஆனால், இது குறித்து ரஹ்மான் கவலைப்பட மாட்டார்” என்று பேசியுள்ளார்.