மதுபான விடுதியில் நடந்த மோதல், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு: நடந்தது என்ன? | Lakshmi Menon

கொச்சியில் வசிக்கும் லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனீஷ் மற்றும் சோனாமோல் ஆகிய மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபான விடுதியில் நடந்த மோதல், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு: நடந்தது என்ன? | Lakshmi Menon
1 min read

ஐடி ஊழியரை தாக்கியதற்காகவும், கடத்தியதற்காகவும் நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது மூன்று நண்பர்களுக்கு எதிராக ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எர்ணாகுளம் வடக்கு காவல்நிலையத்தில் ஐடி ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 24 அன்று கொச்சி பேனர்ஜி சாலையில் இருக்கும் மதுபான விடுதி ஒன்றுக்கு தனது மூன்று நண்பர்களுடன் லட்சுமி மேனன் சென்றுள்ளார். இரவு 11 மணியளவில் லட்சுமி மேனன் தரப்புக்கும், அங்கிருந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, எதிர் தரப்பினர் சென்ற காரை பின் தொடர்ந்து மற்றொரு காரில் சென்ற லட்சுமி மேனன் தரப்பினர், அதை எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தின் மீது மறித்துள்ளனர். அங்கு வைத்து மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

தற்போது காவல்துறையில் புகாரளித்துள்ள எதிர் தரப்பை சேர்ந்த ஐடி ஊழியரான அந்த இளைஞரை, மேம்பாலத்தில் வைத்து தங்களது காரில் லட்சுமி மேனன் தரப்பினர் தூக்கிப்போட்டுச் சென்றுள்ளனர். காருக்குள் வைத்து அந்த இளைஞரை தாக்கியும், வசவுச் சொற்களால் திட்டியும் அவரை 25 கி.மீ. தொலைவில் உள்ள பரவூர் வெடிமாரா சந்திப்பு அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஐடி ஊழியர் அளித்த புகாரின் பேரில் ஆள் கடத்தல், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பி.என்.எஸ். பிரிவுகளான 3(5), 115(2), 126, 127(2), 140(2), 296 மற்றும் 351(2) ஆகியவற்றின் கீழ் எர்ணாகுளம் வடக்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ச்சியாக, இதில் தொடர்புடைய கொச்சியில் வசிக்கும் லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனீஷ் மற்றும் சோனாமோல் ஆகிய மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in